முத்தலாக் மசோதா வாக்கெடுப்பு


#இந்தியா
முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததைப் போலவே திமுக உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசிவருகின்றனர். ஆனால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக எம்.பி.க்களும் மாநிலங்களவையில் இதை எதிர்த்துப் பேசியுள்ளனர்.
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த மசோதாவின் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று கூறினார்.
அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் சிலவற்றைப் படித்துக்காட்டிய அவர், இந்த மசோதா இந்த உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை கையாள்வதை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முஸ்லிம் திருமணங்கள் என்பவை உரிமையியல் வகைப்பாட்டுக்குள் வருகின்ற ஒப்பந்தங்கள் என்றும், இந்த உரிமையியல் (சிவில்) ஒப்பந்தத்தை மீறும் செயல்களை எப்படி குற்றவியல் (கிரிமினல்) குற்றமாக வகைப்பாடு செய்யமுடியும் என்று அவர் கேட்டார்.
முத்தலாக் அளிக்கும் முறை ஏற்கெனவே செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது. அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. முஸ்லிம்கள் சட்டத்தில் அது அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஒரு முஸ்லிம் கணவன் மூன்று முறை தலாக் சொல்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
குழந்தைகள் யார் பாதுகாப்பில் இருப்பது என்பது ஏற்கெனவே மதச்சார்பற்ற சட்டத்துக்கு உட்பட்ட விவகாரமாக இருக்கிறது என்று நவநீதகிருஷ்ணன் குறிப்பிட்டார்.