பிரியங்கா சோப்ரா, கபடதாரி

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த காலக்கட்டத்தில் போரை ஆதரித்தார் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என்ன நடந்தது?

லாஸ் ஏஞ்சலீஸில் சோப்ரா இடம்பெறும் அழகு மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பிரியங்கா சோப்ராவை கபடதாரி என அழைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரியங்கா, "Jai Hind #IndianArmedForces", என ட்வீட் செய்திருந்தார்.
அந்த சமயத்தில் இருநாடுகளுக்கு இடையே போர் வரலாம் என்ற அளவுக்கு பதற்றம் நிலவியது.
அமெரிக்காவில் நடந்த ப்யூட்டிகான் விழாவில் ப்ரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் பெண்ணான் ஆயிஷா மாலிக் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய ஆயிஷா, "நீங்கள் (சோப்ரா) மனிதநேயம் குறித்து பேசுவது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் பக்கத்து நாட்டை சேர்ந்த பாகிஸ்தானியான எனக்கு தெரியும், நீங்கள் ஒரு கபட வேடதாரி" என்று பேசி உள்ளார். அந்தக் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், "நீங்கள் அமைத்திக்கான யூனிசெஃப்பின் தூதர். ஆனால், நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத யுத்தத்தை ஆதரிக்கிறீர்கள். இந்த மாதிரியான யுத்தத்தில் யாரும் வெல்லப் போவதில்லை" என அவர் குறிப்பிட்டார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

போரை விரும்பவில்லை

2016ம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் அமைதிக்கான தூதுவராக இருக்கும் பிரியங்கா, "எனக்கு பாகிஸ்தானில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போர் பிரியர் அல்ல. ஆனால், நான் ஒரு தேசபக்தர்" என குறிப்பிட்டார்.
அதே சமயம் ஆயிஷாவின் தொனிக்காக அவரை கடிந்துக் கொண்டார்.
பிரியங்கா, "நாம் அன்பை பரிமாறத்தான் இங்கே இருக்கிறோம். கத்தாதீர்கள்" என்றார்.
பிப்ரவரி மாதம், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பயங்கரவாத குழுவின் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டப் பின், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்கியது.


Advertisement