எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம்,இளையராஜா உடனான மோதல் தீர்ந்ததா?


பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பாட உள்ளனர். இதையொட்டி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இளையராஜா தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தாரே? அவருடன் மோதல் தீர்ந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதில் அளித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- “இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள்.

இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அதுமாதிரிதான் எங்களுக்கும் நடந்தது. இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். என்னை ஒரு அருகம்புல் மாதிரிதான் நினைக்கிறேன்.

இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை சிறியதுதான். இருவரும் அதை மறந்து விட்டோம். உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று இளையராஜா சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.