கோதாவரி, ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து




ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியிலுள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த தலா 30 பேர் இரண்டு அணிகள் விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த படகில் 11 ஊழியர்கள் உள்பட 61 பேர் பயணித்தனர். ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகு சேவைகளை நிறுத்த உத்தரவு
ஆந்திரப் பிரதேசம் முழுவதும் படகு சேவைகளை உடனடியாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிடுமாறும், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழக்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.