நான் நாட்டின் தலைவராவதை எவராலும் தடுக்கவே முடியாது!

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெல்வதை சஜித் பிரேமதாஸவால் தடுக்கவே முடியாது. எமது ஆட்சி மலர்ந்தே தீரும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சஜித் எனக்குச் சவால் அல்ல. ரணிலால் செய்ய முடியாமல் போனதையா சஜித் செய்யப் போகின்றார்? நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை.
இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி திரைமறைவில் பல சூழ்ச்சிகளைச் செய்யக்கூடும். ஆனால், எதுவும் எடுபடாது. நாட்டு மக்கள் நிதானமாக இருக்கின்றார்கள்.
2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் இந்த நாட்டுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. வறுமையின் பிடியில் பாமர மக்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். அரச ஊழியர்கள்கூட இன்று நடுவீதிக்கு வந்து அரசுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். சம்பளப் பிரச்சினையால் அவர்கள் தங்கள் பணிகளைப் புறக்கணித்து வருகின்றார்கள். ஆனால், அரசோ மௌனமாக இருக்கின்றது.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நிலைமையை மாற்றியமைப்போம். நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வோம். வறுமையின் பிடியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்போம். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் நவம்பர் 16ஆம் திகதி எமக்கு ஆணை தர வேண்டும்” – என்றார்.


--- Advertisment ---