இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணரத்ன, வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா உள்பட 10 வீரர்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளனர்.
வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாடவுள்ளன.
பாதுகாப்பு தொடர்பாக விளக்கிவிட்டு பாகிஸ்தான் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டபிறகு பாகிஸ்தான் மண்னில் எந்த சர்வதேச டெஸ்ட் போட்டியும் நடத்தப்படவில்லை.
இந்த தாக்குதலில் பொதுமக்களில் இருவரும், பாதுகாப்பு படையினர் 6 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அமைப்பு (எஸ்எல்சி) வெளியிட்ட அறிக்கையில், ''பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தொடர் குறித்த பாதுகாப்பு ஏற்பாடு பற்றி பேசுவதற்கு இந்த வீரர்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பது தொடர்பாக வீரர்கள் முடிவெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டது.
நிரோஷன் டிக்வெலா, குஷால் பெரேரா, தனஞ்செய டிசில்வா, திசைரா பெரேரா, அகில தனஞ்செய, சண்டிமால், மேத்யூஸ், லக்மால், மலிங்கா மற்றும் கருணரத்ன ஆகிய 10 வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளனர்.
Post a Comment
Post a Comment