மலிங்கவின் மகத்தான சாதனை




#பல்லகெலே,
#Lasith Malinga: Only bowler to take three Hattricks in ODI history! Only bowler to take two Hattricks in T20I history! Only bowler to take five Hattricks in International cricket history! #Cricket

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக குணதிலகா 30 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சான்ட்னெர், டாட் ஆஸ்டில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்தை, இலங்கை அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா கதிகலங்க வைத்தார். அவரது 2-வது ஓவரின் 3-வது பந்தில் காலின் முன்ரோ (12 ரன்) கிளன் போல்டு ஆனார். அது மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட யார்க்கராகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மலிங்காவின் 100-வது விக்கெட்டாக (76 ஆட்டம்) இது அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற மகிமையை மலிங்கா பெற்றார்.

அவரது அடுத்த பந்தை எதிர்கொண்ட ரூதர்போர்டு (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் நடுவர் தீர்ப்பை மாற்றிக் கொண்டார். அடுத்து வந்த காலின் கிரான்ட்ஹோமும் (0) முதல் பந்திலேயே பணிந்தார். மலிங்காவின் அட்டகாசமான யார்க்கரில் கிரான்ட்ஹோம் கிளன் போல்டு ஆக, ஹாட்ரிக் சாதனையாக பதிவானது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட 8-வது ஹாட்ரிக் இதுவாகும். ஆனால் மலிங்காவுக்கு இது 2-வது அனுபவமாகும். ஏற்கனவே வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் (2017-ம் ஆண்டு) ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதையடுத்து இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த ஒரே பவுலர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இத்துடன் மலிங்காவின் அலை ஓயவில்லை. அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஸ் டெய்லர் (0) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தப்பட்டார்.

4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 2-வது பவுலர் மலிங்கா ஆவார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் இந்த ஆண்டு தொடக்கத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

மலிங்கா ஒரு நாள் கிரிக்கெட்டில் (2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்த ஒரே பவுலர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

மலிங்காவின் தாக்குதலில் நிலைகுலைந்த நியூசிலாந்து அணி 16 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. மலிங்கா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது.