சஜித் பிரேமதாசவுடன் இணைந்திருக்கும் கூட்டணியானது,ஜனநாயக வழியில் செல்லுகின்ற கூட்டம்(க.கிஷாந்தன்)

சஜித் பிரேமதாசவுடன் இணைந்திருக்கும் கூட்டணியானது ஜனநாயகத்தை மதிக்கின்ற ஜனநாயக வழியில் செல்லுகின்ற கூட்டம் ஆனால் எதிரணியில் இணைந்திருப்பது ஜனநாயக விரோத சக்திகள் எனவே என்றுமே ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.

மேலும் மலையக மக்களின்  அபிலாசைகள் அவர்களின் நிறைவேற்ற வேண்டிய தேவைகளை ஜனாதிபதி வேட்பாளர்    சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்தவும் நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிப் பயணத்திற்கான தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றை மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.  கூட்டம்  03.11.2019 அன்று காலை12.00 மணிக்கு ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் பிரதான காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசேட அதிதியாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.மேலும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்ட கமிட்டி தலைவர்கள் பொது மக்கள் என பெருந்திரலான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் மலையக மக்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை பேச்சளவில் மாத்திரமே இருந்தன.கடந்த கால அரசாங்கங்கள் எங்களுடைய விடயங்களை வெறுமனே ஒரு பேசு பொருளாக மாத்திரமே முன்னெடுத்து வந்தன.

வரவு செலவு திட்டத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதாக கூறினாலும் அதற்காக ஒரு சதத்தையேனும் நிதி ஒதுக்கவில்லை.அது மட்டுமல்லாமல் எந்த காரணம் கொண்டும்தேயிலை செடிகளை பிடுங்குவதற்கு அனுமதி வழங்க முடியாது என கூறிய ஒரு கால கட்டமும் உண்டு.

ஆனால் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.இவை அனைத்தும் நிறைவேற்றக் கூடிய விடயங்களாகும்.

பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை.எனவே இவ்வாறான ஒரு தலைவரையே மலையக மக்கள் வரவேற்கின்றார்கள்.ஒரு தலைவன் என்பவன் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைபுரிந்து கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.இந்த தகுதி எங'களுடைய வேட்பாளரிடம் இருக்கின்றது.
 
அதே போல எங்களுடைய நீண்ட கனவான மலையக தேசிய பாடசாலை சஜித் பிரேமதாச ஜனாதியதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அதற்கான அடிக்கல் நாட்டப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 10 தேசிய பாடசாலைகள் என குறிப்பிப்பட்டுள்ளது.ஆனால் நான் சஜித் பிரேமதாசவுடன் கதைத்திருக்கின்றேன் 10 தேசிய பாடசாலைகள் போதாது அது 25 ஆக உயர்த்தப்பட வேண்டும். என்று அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.