இதயம் என் இதயத்தை தொட்டது


இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

சென்னை

தமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக பேசாமல் இருந்த நிலையில் இன்று ஒருவரை ஒருவர்  சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அன்னக்கிளி என்ற  தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதுமுதற்கொண்டு அவரது இசை ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது.

அப்போது கிராமத்து வாசனையுன் எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் இனிமையானவை.

1970, 80 காலகட்டங்களில் இளையராஜா-பாரதிராஜா கூட்டணி ராஜ கூட்டணியாக வலம் வந்தது. பாரதிராஜா படம் என்றால் இளையராஜா இசை என எழுதி வைத்துக்கொள்ளலாம் என சொல்லும் அளவிற்கு இணைந்து ஹிட் கொடுத்தனர்.
 
இருவரது கூட்டணியில் உருவான படங்களில்  இடம்பெற்ற இசை மற்றும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத காவியம். 1992ம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் திரைப்படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இந்த கூட்டணி விலகியது. இருவரும் பேசிக்கொள்வதையும் தவிர்த்து வந்தனர். 

இந்நிலையில் நீண்ட காலம் பேசாமல் இருந்த இருவரும் இன்று திடீரென சந்தித்து அன்பையும், நட்பையும்  பரிமாறிக்கொண்டனர்.

இயலும், இசையும் இணைந்தது, இதயம் என் இதயத்தை தொட்டது என பாரதிராஜா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
 
இருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது தமிழ் சினிமா ரசிகர்களையும் , சினிமா நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.