'பொப்பிசைத் திலகம்' எஸ்.ராமச்சந்திரன் அவர்களது மறைவு


Mahdy Hassan Ibrahim
'பொப்பிசைத் திலகம்' எஸ்.ராமச்சந்திரன் அவர்களது மறைவு அவரை அறிந்த, அவரோடு பழகியவர்களை மட்டுமல்ல..அவரை அறியாத அவரது என்றும் இனிய பொப்பாடல்களால் ஈர்க்கப்பட்ட அனைவரையும் ஆழ்ந்த கவலையடைய
வைத்துள்ளது!
1970களில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் வாராவாரம் ஒலிபரப்பான "ஈழத்துத் தமிழ் பொப்பிசைப் பாடல்கள் "
என்ற நம் அன்பு அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீத் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில்
அவர் பாடிய 'கனவில் வந்த கனியே' என்ற
பாடல் அமரர் ராமச்சந்திரன் அவர்களது
குரலில் ஒலித்தபோது அனைத்து நேயர்களது கவனமும் அவர் மீது திரும்பியது! தொடர்ந்து அவர் பாடிய " வான நிலவில் அவளைக் கண்டேன் நான்", "நத்தை
என ஊர்ந்து நடக்கின்றார்" " ஆடாதே ஆடாதே" போன்ற எல்லாப் பாடல்களுமே
ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு பொப்பிசையின் பொற்காலமான 70களில்
மேடை நிகழ்ச்சிகளிலும் அவரால்
பாடப்பட்டதை நேரில் பார்த்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்! பின்னாட்களில் வானொலி நிலையத்தில் அவரோடு பணிபுரியும் போது அவரது பழகும்
பாங்கு அவர் மீது பெருமதிப்பை வளர்த்தது! சகல அறிவிப்பாளருக்கும் பிடித்தமானவராக
ஓய்வு பெற்றுச் செல்லும்வரை அவர் திகழ்ந்தார்!
அவரது வாழ்க்கைக் குறிப்புகளுக்கமைய
1949ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 12ஆம் திகதி நவாலியில் பிறந்த அவர் அரியாலையில் வளர்ந்தவர்! இளமையிலேயே இசையார்வம் கொண்டிருந்த அவர் 1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 07ஆம் திகதி இலங்கை வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக இணைந்து அதே
ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல்
நிரந்தர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளரானார்! 1977ல் முதல்தர நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகப் பதவி உயர்வு பெற்ற அவர் 1994ல் ஒலிபரப்புப்
பொறுப்பாளராக நியமனம் பெற்றார்!
1997ஆம் ஆண்டு முதல் வர்த்தக சேவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைப்பாளராக
ஓய்வு பெறும்வரை கடமை புரிந்தார்! ஓய்வு பெற்ற பின்னரும் தனது நண்பருடன் இணைந்து ஒலிபரப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தியதோடு சில புதிய பொப்பாடல் CDக்களையும் தயாரித்து வெளியிட்டார்!
உடல்நிலை காரணமாக அம் முயற்சிகளை
அவரால் தொடர முடியவில்லை!
2020.02.16 இரவு நம்மைப் பிரிந்த அவரது பூதவுடல் தெஹிவளை, ராமநாதன் ஒழுங்கை
இல. 6A என்ற முகவரியிலுள்ள அவரது
இல்லத்தில் வைக்கப்பட்டு புதன்கிழமை 19ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில்
இறுதிக்கிரியைகளுக்குப் பின்
கல்கிஸ்ஸை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனக்கிரியைகள் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது!