கடலுக்குள் திருமண நாள் கொண்டாட்டம்: அலையால் இழுத்துச் செல்லப்பட்ட மனைவி

சென்னை பாலவாக்கத்தில் தங்கள் இரண்டாவது திருமண நாளன்று கடல்நீருக்குள் நின்று கொண்டு மோதிரம் மாற்றிக்கொள்ள ஒரு தம்பதி முயன்றபோது மனைவி நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
வியாழன் இரவு உணவுக்கு வெளியே சென்றுவிட்டு, வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் - வேணி ஷைலா தம்பதியினர் நண்பர்களுடன் கடற்கரைக்கு வந்துள்ளனர். சுமார் 30 பேர் கடலை நோக்கிச் சென்றபோது கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று காவல் உதவி ஆணையர் விஷ்வேஸ்வரய்யா தெரிவித்துள்ளார்.
எனினும் சற்று நேரத்தில் கேக் வெட்டியபிறகு அவர்கள் இடுப்பளவு நீரில் இறங்கி மோதிரம் மாற்ற முயன்றபோது வேணி கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டார். 
இரண்டாவது திருமண நாளான வெள்ளியன்று, அதிகாலை 2 மணியளவில் கொட்டிவாக்கம் அருகே அவரது உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த வேணிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


Advertisement