கொரோனாவும் , காத்தான்குடி வர்த்தகமும்




முழு நாடும் கொரோனா அச்சத்தில் ஸ்தம்பித்திருக்கும் இச்சூழ்நிலையில் ஊரடங்குச்சட்டம்  இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2  மணிக்கு அமுலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ...

 காத்தான்குடி மக்களது நுகர்வும் , வர்த்தகமும்  குறித்த 8 மணி நேர இடைவெளியில் எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

 சில  வேளை திங்கட்கிழமை 2  மணிக்கு பின்னர் மீண்டும்  நாம் இன்னுமொரு ஊரடங்குச்சட்டத்தை எதிர்நோக்கலாம் , எனவே மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக பிரயத்தனம் எடுக்க கூடும் , இவ்வாறன சூழ்நிலைகளில் எமது பிரதேசத்தில்  மக்கள் அதிகமாக பின்வரும் இடங்களில் ஒன்று சேருவதற்கான  சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது ...

1 - மொத்த சில்லறை விற்பனை நிலையங்கள்
2 - மரக்கறி விற்பனை நிலையங்கள்
3 - மீன் , கோழி , மாட்டு இறைச்சி கடைகள்
4 - அத்தியாவசிய பொருட்கள் விற்பனை  நடைபெறும் தற்காலிக சந்தைகள்
5 - மருந்தகங்கள்
6 - உணவகங்கள்

குறித்த நேர இடைவெளியில் , இவ்வாறான இடங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள போகிறோம் என்பதில் தான்,  நாம் சனிக்கிழமை , மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் வீடுகளில் முடங்கி நாம் செய்த தியாகங்களுக்கான பிரதி பலனை அடையலாம்.

அல்லது அன்றைய தினம் வழமை போன்று எமது நகர்வுகள் இருக்குமாக இருந்தால் சில சமயம் மிக மோசமான சூழ்நிலைகளுக்கு  நாம் தள்ளப்படலாம். குறிப்பாக  நமது பிரதேசம் கிழக்காசியாவிலேயே அதிக சன நெரிசல் கொண்ட நகரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது .

இச்சந்தர்பத்தில் மேற்படி விடயம் தொடர்பாக சமூக நிறுவனங்கள்  கூடிய அக்கறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு  சில திட்ட முன்மொழிவுகளையும் முன்வைக்கின்றேன்.

நுகர்வோர் பின்பற்ற வேண்டியவை 

1- அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியேறுவதை முற்றாக தவிர்ப்போம் .

2- பொருள் கொள்வனவின் போது சன நெரிசல் குறைந்த இடங்களில் பரவலாக பொருட்களை கொள்வனவு செய்வோம்

3 - கண்டிப்பாக  பாதுகாப்பு  கவசங்களை அணிந்து கொள்வோம்

4 - தேவை முடிந்ததும் விரைவாக வீடுகளுக்கு செல்வதோடு , கைகளை நன்றாக  கழுவிக்கொள்வோம் 

வர்த்தகர்கள் பின்பற்ற வேண்டியவை

1 -  சன நெரிசலை குறைப்பதற்க்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல்

2 - ஊழியர் பாதுகாப்பை உறுதி படுத்தல் - முக கவசம் 

3 - பணப்பரிமாற்றத்தின்போது  போதிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளல் - கை உறை 

4 - வாடிக்கையாளர்கள்  கடை களுக்குள் உள்  நுழைந்து பொருட்களை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தடை செய்தல்

மேற்சொன்ன விடயங்களுக்கு மேலதிகமாக இன்னும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து..

எமது பிரதேசத்தின் வர்த்தகர்களையும் நுகர்வோரையும் ஒழுங்குமுறை படுத்துவதன் ஊடாக  முன்மாதிரியான வர்த்தக சமூகமாக இந்நாட்டிற்கு  நாம் பங்களிப்பு செய்வோம்.

- முஹம்மத் ஷாமில் -