வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி?


அலுவலகம் சார்ந்து ஒரு குழுவாக வீடியோ மீட்டிங்கில் இணையும்போது செய்ய வேண்டிய, செய்யக்கூடாத தகவல்கள் உங்களுக்காக.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டைவிட்டு வெளியே வருவதையும், பொது இடங்களில் கூடுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என அரசுத் தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் சொல்லப்பட்டதை அடுத்து, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வழங்கியுள்ளது.


கரியர் பிரேக் அப்... எளிதாக வேலையில் சேர 5 யோசனைகள்!
முன்பு அலுவலகங்களில் நடந்த மீட்டிங்கில் இப்போது வீடியோ கான்பரன்ஸிங்கில் நடக்கிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் வீடியோ அழைப்புகளுக்குப் பலரும் பழகிவிட்டாலும், அலுவலகம் சார்ந்து ஒரு குழுவாக வீடியோ மீட்டிங்கில் இணையும்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாதவை என சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.


வீட்டிலிருந்து பணிபுரிகிறோம். வீட்டிலிருந்துதானே வீடியோவில் இணையப்போகிறோம் என்பதற்காக, நீங்கள் வீட்டில் கேஷூவலாக அணிந்திருக்கும் ஆடைகள் அல்லது இரவு நேர ஆடைகளுடன் வீடியோ மீட்டிங்கில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். இது, நிர்வாகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு உங்களின் மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதால் உங்களின் அலுவகத்திற்கு நீங்கள் வழக்கமாக அணிந்து செல்லும் கேஷுவல் அல்லது ஃபார்மல் உடைகளைத் தேர்வுசெய்து அணிவதே நல்லது.


இங்கேயும் லேட்டா வராதீங்க பாஸ்!
உங்கள் நிர்வாகமும், சக பணியாளர்களும் எந்த நேரத்தை வீடியோ மீட்டிங்கிற்காக குறித்துள்ளார்களோ, அந்த நேரத்தில் வேறு எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கிவைத்துவிட்டு, உரிய நேரத்தில் வீடியோ காலில் இணைவது அவசியம். அலுவலகத்துக்கு லேட்டாக செல்லும்போது டிராஃபிக், வண்டி பஞ்சர் என பல கதைகள் விடலாம். வீட்டில் இருக்கும்போது அதெல்லாம் செல்லாது. வீட்டில் இருக்கும்போதும் நேரம் கடைபிடிக்கவில்லை என்றால் மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது மிகவும் தவறான அபிப்ராயம் ஏற்படும்.


நோ டிவி வால்யூம்!
வீடியோ கால் பேசும்போது, வீட்டில் தொலைக்காட்சி சத்தம், குழந்தைகளின் சத்தம், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் தொலைபேசி சத்தம் போன்றவை மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால், தனியறையைத் தேர்வுசெய்து அமர்ந்து கொள்ளுங்கள். சன் மியூசிக் அங்கரை போல 'உங்க டிவி வால்யூம்ம குறைங்க'னு மற்றவர்களை சொல்ல வைக்காதீர்கள்!


வீட்டிலிருந்து பணிபுரிதல்
அங்குமிங்கும் நடந்துகொண்டே வீடியோ மீட்டிங் பேசுவதை தவிர்த்து, ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு பேசுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அவ்வாறு அமரும் முன்பே, மற்றவர்களின் கவனத்தைக் குலைக்கும் எந்தப் பொருளும் உங்களின் பின்புறம் இல்லாமல், நல்ல வெளிச்சத்துடன் கூடிய பிளைன் பேக்ரவுண்டை தேர்வுசெய்து அமருவது அவசியம். இதற்காகவே ஓர் இடத்தை ரெடி செய்து தினமும் அங்கேயே உட்கார்ந்தால் சிறப்பு.


கிளோஸ்-அப் வேணாமே!
வீடியோ அழைப்புகளுக்கு லேப்டாப், மொபைல், டெஸ்க்டாப் என நீங்கள் எந்த உபகரணத்தைப் பயன்படுத்தினாலும், முகத்தை கேமராவிற்கு மிக அருகில் வைத்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கேமராவிற்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்தது 30 செ.மீ இருப்பது நல்லது. அதே போன்று ஆடியோ அளவுகளும் சரியாக உள்ளதா என்பதையும் செக் செய்துகொள்ளுங்கள். ஹெட்போனில் பேசுபவர்கள் மைக்கை மிக அருகில் வைத்து பேசினால் அது இரைச்சலை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளனசதி.

ஃப்ரேம்மை செட் செய்யுங்கள்
கேமரா இணைப்பிற்காக நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தை நீங்கள் கைகளால் பிடித்திருந்தாலும் சரி, ஓர் இடத்தில் வைத்திருந்தாலும் சரி சாதனத்தில் உள்ள கேமரா உங்களின் நெற்றிக்கு நேராக இருப்பது போன்று ஃபிக்ஸ் செய்து கொள்ளுங்கள். மீட்டிங் ஆரம்பித்த பிறகு கேமராவை அங்குமிங்கும் நகர்த்துதல், இடம் மாற்றுதல், கேமராவிற்கு நேராக விரல்களைக் கொண்டு வீடியோவை ஜூம் இன் அல்லது ஜூம் அவுட் செய்தல் போன்றவற்றைத் தவிருங்கள்.


கைதூக்கிப் பழகுங்கள்!
வீடியோ காலில் ஒருவர் பேசும்போது, மற்றவர்கள் நடுவில் கருத்து சொன்னால், அது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தருவதோடும் ஒருவர் சொல்லும் தகவலும் மற்றவர்களை முழுமையாகச் சென்று சேராது என்பதால், மற்றவர்கள் பேசுவதை பொறுமையாகக் கேட்டு, உங்களின் நேரம் வரும்போது கருத்துகளைக் கூறுங்கள். இல்லையென்றால் கைகளை மட்டும் உயர்த்தி உங்களிடம் ஒரு கருத்து இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். வீடியோ காலில் தேவையில்லாததைப் பேசி அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்காமல், என்ன பேச வேண்டும் என்பதை முதலிலேயே குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடிப்பது நல்லது.

செக் பண்ணிட்டு களத்துல இறங்குங்க!
வீடியோ மீட்டிங்கிற்கு நீங்கள் பயன்படுத்தப்போகும் சாதனம் சரியான இணைய இணைப்பில் உள்ளதா... முழுவதுமாக சார்ஜ் ஏறி உள்ளதா... என்பதை மீட்டிங் ஆரம்பிக்கும் முன்பே செக் செய்து தயாராகுங்கள். மீட்டிங்கில் இருந்து எழுவதற்கு இதையெல்லாம் ஒரு காரணமாக சொல்லாதீர்!




நோ மொபைல்ஸ் ப்ளீஸ்!

வீடியோ மீட்டிங்கின் இணைப்பில் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, நமக்கான நேரம் வரும் வரை வேறு எந்த வேலையாவது செய்துகொண்டிருக்கலாம் என அசட்டையாக இருக்காமல், மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், வீடியோ இணைப்பில் இருக்கும்போது கலைந்திருக்கும் தலை முடியைச் சரி செய்வது, மூக்கை சுத்தம்செய்வது, காதுகளைச் சுத்தம்செய்வது, மொபைல் நோண்டுவது போன்ற அடுத்தவர்கள் அருவருக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.

ட்ரையல் பாருங்கள்!

வீடியோ அழைப்பிற்கு எல்லோரும் என்ன சாஃப்ட்வேர் அல்லது ஆப் பயன்படுத்தப் போகிறார்களோ அந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதில் ஏதும் சந்தேகம் இருப்பின், வீடியோ இணைப்பில் இணைவதற்கு முன்பே சகபணியாளர் அல்லது நண்பர்களைத் தொடர்புகொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மீட்டிங்கில் மற்றவர்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க முடியும்.

அட்மின் வீடியோ இணைப்பைத் துண்டிக்கும்வரை பொறுமையாக இருந்து, அதன் பின் மற்ற பணிகளைத் தொடருங்கள். வொர்க் ஃப்ரம் ஹோமில் உங்களின் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துகள்!