இலங்கையின் பிந்திய கள நிலவரம்


#RA.Pirasaanth.
இலங்கையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று (மே 11) தொடங்கியுள்ளது

கோவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இடைக்கிடை தளர்த்தப்பட்டாலும், ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமலில் வைக்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்த நிலையில், இலங்கையின் கொரோனா அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று முதல் தளர்த்தப்பட்டது..

குறிப்பாக வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல், இறக்குமதி ஏற்றுமதி செயற்பாடுகளை ஆரம்பித்தல், அரச மற்றும் தனியார் துறைகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு தொடர்ந்தும் அமலில் இருந்தாலும், நிறுவனங்களில் பணியாற்றுவோர் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பணிக்கு இன்று முதல் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொழும்பில் இன்று அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன போக்குவரத்துகள் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் காலை 8.30க்கு முன்னர் பணிக்கு வர வேண்டும் என்பதுடன், அவர்கள் மாலை 3 அல்லது 4 மணிக்கு முன்னர் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

அதேபோன்று, தனியார் துறையினர் முற்பகல் 10 மணிக்கு முன்னர் பணிக்கு வருகைத் தந்து, மாலை 4 அல்லது 5 மணிக்கு முன்னர் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடித்தல் அத்தியாவசியமானது என்பதுடன், சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும் என கடுமையாக உத்தரவிடப்பட்டுள்ளது.


நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆள் அடையாளஅட்டை, ஊழியர் அடையாளஅட்டை, நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருத்தல் அத்தியாவசியம் என்பதுடன், குறித்த தினத்தில் பணிக்கு வர வேண்டும் என நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடிதமொன்றையும் கையில் வைத்திருத்தல் அத்தியாவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதமானது கடதாசி மூலமாகவோ அல்லது வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தள தகவல்கள் மூலமாகவோ அல்லது சாதாரண குறுந்தகவல் மூலமாகவோ நிறுவனத்தின் பிரதானியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அறிவித்தல் கடிதத்தை வைத்திருத்தல் அத்தியாவசியம் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மக்களை வெளியில் வர வேண்டாம் என போலீஸார் அறிவித்துள்ளனர்.


குறிப்பாக தேசிய அடையாளஅட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே சாதாரண நடவடிக்கைகளுக்காக மக்களை வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாகவுள்ள இலக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படியே, மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.