தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 238 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 238 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று வௌியேறியுள்ளனர்.

08 தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இவர்கள் வௌியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வௌிநாடுகளில் சேவையாற்றிய நிலையில் நாடு திரும்பி, கிளிநொச்சி – இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 71 பெண்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால், தனிமைப்படுத்தி கண்காணிப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் – பலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட 10 பேர் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டவர்களே இன்று வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலாலி விமானப்படைத்தளத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டவர்களில் இதுவரை 20,956 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

49 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,889 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்


Advertisement