ரிஷாட் பதியுதீன் மனு தாக்கல்


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படைய உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரவீந்ர விமலசிறி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கும் அவர், தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக்குழு தனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என அறிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறும் அதற்காக பிரதிவாதிகளுக்கு 5 கோடி நட்டஈடு வழங்குமாறு தீர்ப்பளிக்குமாறும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மனு விசாரணை நிறைவடையும் வரையில் தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.