புதிய உச்சத்தை அடைந்த நோய்த்தொற்று பாதிப்புகள்

 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரழிவை சந்தித்த பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நோய்த்தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த நாட்டில் புதிதாக 1,200 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், கடந்த மே மாதத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,524 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்புவரை, கொரோனா வைரஸால் அதிகபட்ச பாதிப்பை சந்தித்த நாடாக இருந்த ஸ்பெயினில் மறுபடியும் நிலைமை மோசமடைய துவங்கியுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும், புதிதாக 1,418 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. முகமையிடம் பேசிய ஸ்பெயினிலுள்ள கேட்டலோனியா பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் நிபுணரான சால்வடார் மேசிப், நாடு ஒரு "முக்கியமான தருணத்தில்" இருப்பதாக கூறியுள்ளார்.

"நிலைமை இன்னும் சிறப்பாக மாறவோ அல்லது மோசமடையவோ கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நாடுமுழுவதும் உள்ள நோய்த்தொற்று பரவல் மூலங்கள் தீவிரமடைவதற்கு முன்னதாக அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை போன்றே பெல்ஜியம், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Advertisement