சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி



 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பௌலிங் செய்தது.

மளமளவென விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் இறுதியில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சௌரப் திவாரி 42 ரன்கள் எடுத்தார்.

163 என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆறு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சி.எஸ்.கே.

ஆனால் அதன் பின்பு வந்த அம்பாட்டி ராயுடு, 'பாஃப்' டு பிளெசீ கூட்டணி நிலைத்து நின்று ஆடியது.

48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அம்பாட்டி ராயுடு ஆட்டமிழந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில் 19. 2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஐபிஎல் தொடர்களில் அதிக அளவு சாம்பியன்ஷிப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோதின.

இதுவரை 4 முறை ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ள நிலையில், அதில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 1 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளன.

ஐபிஎல்

கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேவேளையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களுக்கும், 2020 ஐபிஎல் தொடருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் புதியது.

ஐபிஎல் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது மைதானத்தில் ஒலிக்கும் ஆரவார கோஷங்களும், நடனங்களும் தான். ஆனால், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், இந்த தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும்.