மீண்டும் துவங்கியது அஜர்பைஜான்,ஆர்மீனியா சண்டை

 


சர்ச்சைக்குரிய நாகோர்னோ - காராபாக் மலைப்பகுதியில் அஜர்பைஜான், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அர்மீனியா குற்றஞ்சாட்டியுள்ளது.

மனிதநேய அடிப்படையில் மோதலை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்ட நான்கு நிமிடங்களில் அஜர்பைஜான் அதனை மீறியதாக அர்மீனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அஜர்பைஜான் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இருநாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் கடந்த மாதம் தொடங்கியது.

சர்ச்சைக்குரிய பகுதியில் 1994ஆம் ஆண்டு போர் நிறுத்தம் நடைபெற்ற பிறகு நடைபெறும் மிகப்பெரிய வன்முறை இதுவாகும்.

இதற்கு முன்னதாக கடந்த வார இறுதியில் ரஷ்ய தலையீட்டால் கையெழுத்தான போர் ஒப்பந்தத்தை மீறுவதாக இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று குற்றம் சுமத்தியது.

இருப்பினும் இருநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தன.

இடிபாடுகள்

சர்ச்சைக்குரிய நாகோர்னோ பிரச்சனையை கண்காணித்து அமைதியை நிலைநாட்ட1992ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்களின் கூற்றுப்படி இந்த முடிவு ஏற்பட்டதாக அஜர்பைஜானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அர்மீனியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் இவரின் இந்த கூற்றை வழிமொழிந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருருந்தார். அதில் பதற்றத்துக்குரிய பகுதியில் சண்டையை நிறுத்தும் முயற்சியை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் அஜர்பைஜான், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அர்மீனியா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக அர்மீனியா ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சுமத்தியிருந்தது இந்த தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இரு நாடுகள் இடையே என்ன பிரச்சனை?

மலைகள் சூழ்ந்த பகுதியான நாகோர்னோ - காராபாக் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சனை.

இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.

இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அஜர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

போரில் முடிவில் அந்த நாகோர்னோ - காராபாக் பகுதிகள் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பிரிவினைவாத அர்மீனிய இனத்தவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அர்மீனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

பிரச்சனைக்குக் காரணமான நாகோர்னோ - காராபாக் பகுதி

அர்மீனியா - அஜர்பைஜான்
  • மலைப் பகுதியான இதன் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர்கள்
  • கிறிஸ்தவ அர்மீனியர்களும், துருக்கிய இஸ்லாமியர்களும் இங்கு வசிக்கின்றனர்.
  • அஜர்பைஜானின் ஒரு பகுதியாகச் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், அர்மீனிய இனத்தவர்களே இங்கு அதிகம்.
  • 1988 - 1994 இடையே இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் 30 ஆயிரம் பேர் பலியாகினர், 10 லட்சம் பேர் புலம்பெயர்ந்தனர்.
  • ரஷ்யாவின் ராணுவ தளம் அர்மீனியாவில் உள்ளது.


Advertisement