உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி


 


(க.கிஷாந்தன்)

 

கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சை கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை (12.10.2020) ஆரம்பமானது. மலையக பகுதிகளில் இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி சென்றதை காணமுடிந்தது.

 

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் நேரங்காலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றிருந்தனர்.

 

எனினும், ஒரு சில மாணவர்கள் முகக்கவசம் அணிவதற்கு மறந்திருந்தனர். அவ்வாறானவர்களுக்கு பாடசாலை அதிபர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு, முகக்கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் பரீட்சை நிலையங்களுக்கு வரக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

 

பாடசாலைகளுக்கு முன் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து உரியவகையில் பரீட்சை நிலையங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. சில மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.

 

அந்தவகையில், அட்டன் கல்வி வலயத்தில் 26 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3161 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 1392 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 800 மாணவர்களும், தனியார் பரீட்சாத்திகள் 969 பேரும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

 

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.