#கேகேஆர் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகல்

 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் (கேகேஆர்) கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியின் கேப்டன் பதவி, துணை கேப்டன் ஆன இயான் மோர்கன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வாயிலாக கேகேஆர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தும் வகையில் வேறு ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது வெறும் பொறுப்புகள் பரிமாற்றமே என்றும் அந்த அணியின் தலைமை செயல் இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கி தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஐபிஎல் தொடரின் 2018ஆம் ஆண்டு தொடருக்கு முன்னதாக, கேகேஆர் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். அதுவரை அந்த அணியின் கேப்டன் ஆக இருந்த கெளதம் காம்பீர், டேர் டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணியில் சேர்ந்ததை அடுத்து தினேஷ் கார்த்திக் நியமனம் நடந்தேறியது.

கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரின் இரண்டு சீசன்களிலும் தினேஷ் கார்த்திக், கேகேஆர் அணியை வழிநடத்தினார். 2019ஆம் ஆண்டில் அவரது தலைமையிலான அணி ஐந்தாவது இடத்தில் இடம்பிடித்தது.

மோர்கன்

தற்போதைய மாற்றத்தையடுத்து இயான் மோர்கன் தலைமையில் கேகேஆர் அணி, வெள்ளிக்கிழமை அபு தாபியில் நடக்கும் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அணித் தலைவர்களின் மாற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேகேஆர் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், "கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அவ்வளவு எளிதாக யாரும் எடுக்க மாட்டார்கள். அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தினேஷ் கார்த்திக் போன்றோரால்தான் இது சாத்தியம்" என்று தெரிவித்தார்.

"2019ஆம் ஆண்டில் உலக கோப்பை வென்ற கேப்டனான இயோன் மோர்கன், அணியின் கேப்டன் ஆகி இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். இந்த போட்டியின் போது தினேஷ் கார்த்திக்கும் இயோனும் அற்புதமாக இணைந்து பணியாற்றியுள்ளனர், இயோன் கேப்டனாக பொறுப்பேற்றாலும், இது அணித்தலைமை அளவிலான பொறுப்பு இடமாற்றம் மட்டுமே. இந்த மாற்றம் தடையற்ற முறையில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று வெங்கி மைசூர் கூறினார்.Advertisement