ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை



வி.சுகிர்தகுமார்   0777113659

ஆலையடிவேம்பு சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்;ட பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேத்தில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் இனங்காணப்பட்டவர்களுக்கே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றாளர் உள்ளிட்ட சில குடும்பங்களை சேர்ந்தவர்கள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பரிசோதனை முடிவுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளிவரலாம் எனக் கூறிய அவர் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனாலும் மக்கள் மிகவும் கவனமான முறையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் நேற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தலைமையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

இதில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கும் முக்கிய தீர்;மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அதனை மீறி செயற்படுகின்றவர்கள் பொலிசாரல் கைது செய்யப்பட்டு 14நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறினார்.

கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கலாம் எனும் அச்சத்திலும் மக்களை பாதுகாக்க வேண்டும் எனும் ஒரே நோக்கோடும் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுக்கமான இச்சூழலில் பொறுப்புடன் நடந்து கொண்டால் நாமும் நம்மை சூழவுள்ளவர்களும் பாதுகாக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமது சபையும் தானும் தயாராகவிருப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் உறுதியளித்தார்.