எவரெஸ்ட் சிகர உயரம் அதிகரிப்பு

 


உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட், முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரித்துள்ளதாக நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன.

சிகரத்தின் உச்சியில் படர்ந்துள்ள பனியை கணக்கிடலாமா, வேண்டாமா என்பதில் நேபாளம் மற்றும் சீனாவுக்கிடையே இதுவரை மாற்றுக்கருத்து நிலவி வந்தது. தற்போது கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டராக (29,032 அடி) உள்ளது.

இதற்கு முன்னர், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது 8,844.43 மீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனா மற்றும் நேபாளத்தின் நிலப்பகுதிகளில் விரிந்து காணப்படும் எவரெஸ்ட் சிகரத்தை இந்த இருநாடுகளின் தரைப்பகுதியிலிருந்தும் ஏற முடியும்.

உலகின் மிக உயரமான மலை சிகரமான எவெரெஸ்ட்டின் உயரத்தை அளவிடும் உடன்படிக்கை, சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த ஆண்டு நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முடிவுக்கு வந்த நெடுங்கால மாற்றுக்கருத்து

எவரெஸ்ட் சிகரத்தை அதன் பாறை உயரத்திற்கு அளவிட வேண்டும் என்று சீன அதிகாரிகள் கூறிவந்த நிலையில், நேபாள அதிகாரிகளோ சிகரத்தின் மேலுள்ள பனியையும் சேர்த்து அளக்க வேண்டுமென்று வாதிட்டனர்.

இதற்கு முன்னதாக, கடந்த 2005ஆம் ஆண்டு சீன தரப்பு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிட்டிருந்தது. ஆனால், நேபாளத்துக்கு இதில் தொடக்கம் முதலே உடன்பாடு இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய நேபாள அரசு அதிகாரிகள், சீன தரப்பு அவர்களது கணக்கீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், எனவே இரு தரப்பினரும் சேர்ந்து புதியதாக சிகரத்தின் உயரத்தை கணக்கெடுக்க முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மவுன்ட் எவரெஸ்ட்டின் உயரமாக 8,848 மீட்டரை இதுநாள் வரை நேபாளம் குறிப்பிட்டு வந்தது. உண்மையில் இந்த அளவீட்டை 1954ஆம் ஆண்டு இந்தியாதான் மேற்கொண்டது.

எனவே, நேபாள வரலாற்றில் முதல் முறையாக இப்போதுதான் எவரெஸ்டின் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த பணியில் ஈடுபடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நேபாள நில அளவையாளர்கள் எவரெஸ்டின் உச்சிக்கு செல்வதற்கு முன், இரண்டு ஆண்டுகள் அதற்கான பயிற்சி பெற்றனர்.

"இதற்கு முன்பு வரை, நாங்களே கணக்கெடுப்பை மேற்கொண்டதில்லை. ஆனால், இப்போது எங்களிடமுள்ள இளம் அணியினரால் தன்னிச்சையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று அளவெடுக்க இயலும்" என்று நேபாள கணக்கெடுப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தாமோதர் தக்கல் பிபிசியிடம் தெரிவித்தார்.

உயரத்தை அளவிடும் கருவியை பொருத்துவதற்காக எவரெஸ்டின் உச்சிக்கு கடந்த ஆண்டு சென்ற இந்த திட்டத்தின் முதன்மை நில அளவையாளரான ஹிம்லால் கெளதம், அப்போது நிலவிய உறைபனியின் காரணமாக தனது கால்விரலை இழந்தார்.

"மலையேற்ற வீரர்களுக்கு சிகரத்தின் உச்சியை அடைவது என்பது மிகப் பெரிய சாதனை. ஆனால், எங்களுக்கு இது ஒரு தொடக்கமே" என்று தனது பயணத்துக்கு பின்பு பிபிசியிடம் பேசிய கெளதம் தெரிவித்திருந்தார்.

சில புவியியலாளர்கள் 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறியிருந்தனர். 7.8 அளவிலான இந்த நிலநடுக்கத்தினால் நேபாளத்தில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். மேலும், இதனால் எவரெஸ்ட் அடிவாரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 18 மலையேற்ற வீரர்கள் மாண்டனர்.

இந்த நிலநடுக்கத்தால் எவரெஸ்டின் உச்சியின் மீது படிந்துள்ள பனியின் அளவு சுருங்கியிருக்கலாம் என்று சில புவியியலாளர்கள் கூறினர். ஏனெனில், இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து எவரெஸ்டுக்கு அருகிலுள்ள லாங்டாங் ஹிமால் போன்ற வேறு சில இமயமலை சிகரங்களின் உயரம் குறைந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

ஆனால், மற்ற இமயமலை சிகரங்களைப் போலவே எவரெஸ்ட் சிகரமும் காலப்போக்கில் இன்னும் வளர்ந்திருக்கலாம் என்று மற்றவர்கள் வாதிட்டனர். இதற்கு எவரெஸ்டுக்கு கீழுள்ள கண்டத்தட்டு நகர்வை விஞ்ஞானிகள் காரணமாக குறிப்பிடுகின்றனர். ஆனால் பெரிய நிலநடுக்கங்கள் அந்த செயல்முறையை தலைகீழாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"2012ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமே சிகரத்தை நாங்கள் மறுஅளவீடு செய்ததற்கு மிகப் பெரிய காரணம்" என்று தக்கல் கூறுகிறார்.

எவரெஸ்ட்

எவரெஸ்ட் சிகரம் எவ்வாறு அளவிடப்பட்டது?

மலைகளின் உயரங்கள் சராசரி கடல் மட்டத்துடன் அடித்தளமாக அளவிடப்படுகின்றன.

நேபாளம், வங்காள விரிகுடாவை தனது அளவீட்டின் கடல் மட்டமாகப் பயன்படுத்தியது. குறிப்பாக, இந்தியா - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள எவரெஸ்ட்டுக்கு நெருக்கமான ஒரு புள்ளியை இந்தியா ஏற்கனவே ஆய்வு செய்திருந்ததால், அதுகுறித்த தகவல் நேபாள நில அளவையாளர்களுடன் பகிரப்பட்டது.

இந்தியா வழங்கிய அந்த புள்ளிகளை முதலாக கொண்ட நேபாளம், அதிலிருந்து நேராக சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் புலப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் பகுதியில் குறித்துக்கொண்டு அங்கிருந்து மீதமுள்ள உயரத்தை அளவிடும் பணியை தொடங்கியது.

அதேவேளையில் சீன தரப்பு, ஷாண்டோங் மாகாணத்திலுள்ள மஞ்சள் கடலை தங்கள் கடல் மட்ட தளமாக பயன்படுத்தினர் என்று அந்த நாட்டின் அரசு ஊடகமான சீனா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சிகரத்தின் உயரத்தைக் கணக்கிட இரு தரப்பை சேர்ந்த நில அளவையாளர்களும் முக்கோணவியல் சூத்திரங்களைப் பயன்படுத்தினர்.

என்னதான் புதிய மாறுபட்ட முறைகள் கடைபிடிக்கப்பட்டாலும், யாராவது ஒருவர் சிகரத்தின் உச்சியில் இருப்பதும் அவசியமானதாகவே உள்ளது. கடந்த ஆண்டு நேபாள தரப்பினர் சிகரத்தின் உச்சிக்கு சென்ற நிலையில், இந்த ஆண்டு மே மாதம் சீன தரப்பு அங்கு சென்றிருந்தது.

மிகவும் துல்லியமான முடிவை பெறும் வகையில், முக்கோணவியல் கணக்கீட்டுக்காக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்கி காணப்படும் 12 கீழ் சிகரங்களை கொண்டும் அளவீடுகளை மேற்கொண்டதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர். சீன தரப்பினரும் இதே முறையைப் பயன்படுத்தியதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இருதரப்பினரும் கூடுதலாக, செயற்கைகோள் தரவுகளையும் தங்களது கணக்கீடுகளுக்காக பயன்படுத்தினர்.

சீனா இதற்கு முன்பு, 1975 மற்றும் 2005 என இருவேறு முறை எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.