சவுதியில் மார்ச் மாத இறுதிப் பகுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீங்கும்

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் அதாவது 31ம் திகதியிருந்து சவுதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடைகள் முற்று முழுதாக நீக்கப்படவுள்ளது என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பினால் சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் ஓரளவு தளர்த்தப்பட்டு இருந்தாலும், தற்பொழுது வரை அந்நாட்டில் சர்வதேச விமானப் போக்குவரத்தானது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சில நாடுகளுக்கு தற்பொழுது வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை அமுலில் உள்ளது.

இந்த தற்காலிக பயண தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் தொடங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி முதல் விமானப் போக்குவரத்து தடையினை முற்றாக நீக்கவுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என அனைவரும் சவுதியிலிருந்து வெளிச் செல்வதற்கும், வெளிநாடுகளிலிருந்து சவுதிக்குல் உள் நுழைவதற்கும் தாராளமாக அனுதிக்கப்படவுள்ளார்கள்.

சவுதி அரேபிய அரசானது கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனாவின் பாதிப்பையொட்டி பயணத்தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.