ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம்

 .


சுகிர்தகுமார் 0777113659 
 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நேற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பிரதேச விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பலத்த விவாதங்களுக்கு மத்தியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாழ் நிலப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயச் செய்கையினை மேற்கொள்ள அதில் தேங்கி இருக்கும் நீர் தடையாகவுள்ளதாகவும் அந்நீரை வெளியேற்ற சின்னமுகத்துவாரம் வெட்டப்பட வேண்டும் என சில விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனாலும் சின்னமுகத்துவாரம் வெட்டப்படுவதால் களப்பில் உள்ள நீர் வெளியேற்றப்படும் என்றும்; இதனால் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவும் எதிர்வரும் கோடை காலத்தில் நிலக்கீழ் நீர் குறைவடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கலந்து கொண்ட ஒரு சில மீனவர்களாலும் சில விவசாயிகளாலும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் கலந்து கொண்ட பல விவசாயிகள் சின்னமுகத்துவாரம் வெட்டப்படவேண்டும் என்பதில் உறுதியான தீர்மானத்துடன் இருந்த காரணத்தால் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உதவியோடு இன்று குறித்த பிரதேசம் அகழ்ந்துவிடப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு விரைவில் காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான திட்ட முன்மொழிவையும் பிரதேச செயலாளர் முன்வைத்ததுடன் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

இதேநேரம் பிரதேச செயலக வரலாற்றில் பலவருடங்களுக்கு பின்னர் இவ்வாறான பிரதேச விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.