‘ஷஹ்ருல் பரகத்’ - ‘அபிவிருத்தி நிறைந்த மாதம்’

 


புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் பரகத்’ - ‘அபிவிருத்தி நிறைந்த மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.


இஸ்லாத்தின் பார்வையில் ‘அபிவிருத்தி’ என்பதற்கு அர்த்தம் ‘பொருள் குறைவு-பயன் அதிகம்’ அல்லது ‘சேவை குறைவு-நன்மை அதிகம்’, ‘வணக்கம் குறைவு-பிரதிபலன் அதிகம்’ என்பதாகும். இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும், ஒவ்வொரு தர்மத்திற்கும், ஒவ்வொரு நற்கருமத்திற்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது:

‘ஆதமின் மகன் நிறைவேற்றும் ஒவ்வொரு செயலுக்கும் பன்மடங்கு நன்மை வழங்கப்படும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கிலிருந்து ஏழு நூறு மடங்கு வரை நன்மை வழங்கப்படும். எனினும் நோன்பைத் தவிர. அது எனக்கு மட்டுமே உரியது. எனக்காக அவன் தமது உணவையும், தமது இச்சையையும் விட்டுவிடுகின்றான். அவனுக்கு நானே நேரடியாக கூலி வழங்குகிறேன்’ என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

‘எவர் ரமலானில் நன்மைகளில் இருந்து ஏதேனும் ஒரு நன்மையை உபரியாக செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் ஒரு (பர்ளை) கடமையை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார். எவர் ரமலானில் ஒரு கடமையை நிறைவேற்றுகிறாரோ அவர் ரமலான் அல்லாத காலத்தில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவர் போன்றவர் ஆவார்’. (நபிமொழி)

அத்தகைய அபிவிருத்தி நிறைந்த இந்த மாதத்தில் ‘ஸஹர் நேரம்’ ஒரு அபிவிருத்தி நிறைந்த நேரமாக இருக்கிறது.

‘ஸஹர் உணவை உண்ணுங்கள். நிச்சயமாக ஸஹர் உணவுகளில் அபிவிருத்தி நிறைந்துள்ளதாக நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

‘எவர் நோன்பு நோற்க நினைக்கிறாரோ அவர் ஏதேனும் ஒரு உணவைக் கொண்டு ஸஹர் செய்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)

மேலும், ஸஹர் நேரத்தில் நிறைவேற்றப்படும் ‘தஹஜ்ஜத்’ எனும் நடுநிசி நேரத் தொழுகையும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. நோன்பு திறக்கும் நேரமான இப்தார் நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அந்தநேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் மறுக்கப்படாமல் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், பாங்கு மற்றும் இகாமத் இடையே உள்ள நேரமும் அபிவிருத்தி நிறைந்ததாக உள்ளது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

மொத்தத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஸதகா, ஸதக்கதுல்பித்ர் போன்ற உடல் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளை சிரமமின்றி நிறைவேற்ற ரமலான் காலத்தில் நேரம் கிடைக்கிறது. ஒரு நன்மைக்கு பல மடங்கு நன்மை தரும் இந்த அபிவிருத்தி ரமலான் முழுவதும் வியாபித்திருக்கிறது.

‘எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 6:160)

எனவே இந்த ரமலானில் அதிக நன்மைகளைச்செய்து அதற்கு பலனாக பல மடங்கு நற்கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்வோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.