நிந்தவூரில், மர ஆலை தீக்கிரை


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் உட்பட அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் தீப்பற்றி எரிந்த நிலையில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அணைத்துள்ளதுடன் பெரும் அனர்த்தம் ஒன்றினையும் தடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நிந்தவூர் பிரதேச செயலக மற்றும்  சபை எல்லைக்குட்பட்ட  செயின் முஹம்மட் ஜெமீல் என்பவருக்கு  சொந்தமான கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் அதன் அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் ஒன்றும் வெள்ளிக்கிழமை(14) இரவு 7.50 மணியளவில் தீக்கிரைக்கு இலக்காகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதன் போது கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பை ஏற்று சுமார்  08 நிமிடங்களுள் விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் போது சம்பவ இடத்திற்கு  விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மற்றும்  படையினர் நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆஷ்ரப் தாஹீர் உட்பட உறுப்பினர் அஸ்பர் ஆகியோர் தேவையான அனைத்து வகையான முன்னெடுப்புக்களையும் செய்தனர்.

 இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த வர்த்தக நிலையத்தை திறந்ததாகவும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் விரைந்து செயற்பட்ட கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.