'ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம்


 


புனித ரமலானுக்கு ‘ரபீஉல் ஃபுகராயி’ - ஏழைகளின் வசந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. இது குறித்த நபிமொழிகள் கூறுவதை காண்போம்.


‘ஷஃபான் அது எனது மாதம்; ரமலான் அது உங்கள் மாதம்; மேலும் புனித ரமலான் ஏழைகளின் வசந்த மாதமாகவும் உள்ளது; மேலும் தியாகத்திருநாளை உங்களின் ஏழைகள் மாமிசம் உண்டு வயிறு நிறையவும், மனநிறைவு அடையவும் இறைவன் ஏற்படுத்தி உள்ளான். எனவே அவர்களின் பசியைப் போக்க உண்ணக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி).

புனித ரமலானில் ஏழைகளின் பசியையும், வறுமையையும் போக்க, அவர்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைய, ‘ஜகாத்’ எனும் ஏழை வரியையும், ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாமிய மார்க்கம் கடமையாக்கியுள்ளது.

புனித ரமலான் மாதத்தில்தான் ஜகாத் கடமையானது.

‘ஜகாத் எனும் நிதிகள் வறியவர்கள், ஏழைகள், நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய சகோதர(சமுதாயத்தவ)ர்கள், அடிமைகள் (விடுதலை செய்வதற்கும்), கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் அறப்போராட்டம் நடத்துபவர்கள், நாடோடிகள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமை; இறைவன் அறிபவன், ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)

நோன்புப் பெருநாளன்று வழங்கப்படும் தானிய அறத்திற்கு ‘ஜகாதுல் பித்ர்: நோன்புப் பெருநாள் தர்மம்’ என்று சொல்லப்படுகிறது.

ஒரு முஸ்லிம் தமக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவர்களுக்காகவும் தலா நபர் ஒன்றுக்கு இரண்டரை கிலோ வீதம் நாம் உண்ணும் உணவு பண்டங்களான அரிசி அல்லது கோதுமை போன்ற தானியங்களை, அல்லது இதன் அன்றைய சந்தை விலையை சரிபார்த்து ஏழை எளியோருக்கு, பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்பே வழங்கிட வேண்டும்.

‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) கடமையாக்கினார்கள்; அது நோன்பாளியைச் சுத்தம் செய்கிறது; ஏழைகளின் பசியைப் போக்குகிறது. தொழுகைக்கு முன்பு கொடுப்பது ஜகாத்துல் பித்ராக அமைந்து விடுகிறது; அதற்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)

ஜகாத்தின் மூலமாகத்தான் இஸ்லாம் வறுமையை போக்கியது. அதைத்தான் நபியும், நபித்தோழர்களும் செயல்படுத்தினார்கள்.

ஜகாத் கொடுக்காத செல்வந்தரும், கொடுக்கப்படாத செல்வமும் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.

‘இன்னும் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அதனை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 9:34)

‘ஜகாத் நிதி (ஜகாத் அல்லாத இதர) செல்வத்துடன் கலந்து விடுமானால், அந்த செல்வம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ‘ஜக்காத்’ என்னும் தர்மத்தை வாரிவழங்கிட இந்த ரமலான் வழிகாட்டுகிறது. இதன் மூலம் இறைவனின் நெருக்கமும், நன்மைகளும் நமக்கு பரிசாக கிடைக்கின்றது.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்