பன்முகத் திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் 75ஆவது பிறந்தநாள்


 


பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் 75ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 04). ஐம்பது ஆண்டுகால இசைப்பயணம், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள், இசை, நடிப்பு, டப்பிங் என தான் கால்பதித்த துறைகள் அனைத்திலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் எஸ்.பி.பி. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் வலம் வந்தவர்.

அவருடன் திரையுலகில் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடிய பின்னணி பாடகிகளில் சித்ராவும் ஒருவர். சித்ரா அவர்கள் எஸ்.பி.பி. உடனான நினைவுகளை பகிர்ந்து கொள்ள பிபிசி தமிழுடன் கலந்துரையாடினார். அதில் இருந்து,

கே: எஸ்.பி.பி. அவர்களை முதல் முறை சந்தித்த தருணம் நினைவுகூர முடியுமா?

பாடகி சித்ரா

பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

"எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள திரையரங்கில் அதிகம் தமிழ்ப்படங்கள் தான் திரையிடுவார்கள். அதனால், சாருடைய பாடல்கள் எனக்கு பரிச்சயம்தான். முதல் முறை அவரை பார்த்தது 'புன்னகை மன்னன்' படத்தில் 'காலங்காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' பாடல் பதிவின் போது தான்.

எஸ்.பி.பி. சார்தான் இந்த பாடலை பாடப்போகிறார் என என்னிடம் யாரும் சொல்லவில்லை. நான் மனோ பாட வருவார் என எதிர்ப்பார்த்து பாடலை எழுதி, காத்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென, கதவை திறந்து கொண்டு எஸ்.பி.பி. சார் உள்ளே வந்தார். பதற்றமாகி எழுந்து நின்றுவிட்டேன். என்னிடம் நலம் விசாரித்து விட்டு, அங்குள்ள இசைக்கலைஞர்களிடம் அன்போடு சகஜமாக பேசினார். அதைப் பார்த்து தான் பதற்றம் நீங்கி, பாடலை பாடி முடித்தேன்".

கே: பல இசை மேடைகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் உங்களை அவர் ஜாலியாக வம்பிழுப்பாரே. அதுபோன்ற மறக்கமுடியாத சம்பவங்கள்?

"இசைக் கச்சேரிகளிலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, ரசிகர்களை மகிழ்விக்க என்னை கிண்டல் செய்வார். பிறகு தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து, 'உன்னை கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை. மக்கள் அதை ரசிப்பார்கள்' என சொல்வார்.

அப்போது நான் சிரித்து கொண்டே, 'நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் என்னை வம்பிழுக்கிறீர்கள் என்பது போன்ற தலைப்பு வைத்து வீடியோ எல்லாம் போடறாங்க சார்' என்று சொல்வேன். 'அய்யயோ அப்படியா?' என அவரும் சேர்ந்து சிரிப்பார்.

எஸ் பி பாலசுப்ரமணியம்

பட மூலாதாரம்,S. P. BALASUBRAHMANYAM

இதில் மறக்க முடியாத ஒரு விஷயம் உண்டு. ஒரு தெலுங்கு படத்திற்கான பாடல் பதிவு. எஸ்.பி.பி. அவர்களுக்கு அந்த படத்தில் ஐந்தாறு பாடல் பாட வேண்டியிருந்தது. எனக்கு அதில் இரண்டு பாடல்கள். அவர் எப்போதுமே சீக்கிரம் கற்றுக்கொண்டு பாடி முடித்து விடுவார். என்னை 11 மணிக்கு ஸ்டுடியோவிற்கு வர சொல்லியிருந்தார்.

அப்போது அவரே எனக்கு பாடல் சொல்லி கொடுத்தார். நான் தாமதமாக வந்ததால், பாடல் வரிகளின் அர்த்தம் கேட்காமல் வேலை சீக்கிரம் முடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன். எஸ்.பி.பி. சாருடைய பல்லவி முடித்த பின்பு என்னுடைய பல்லவி நான் பாடியபோது அங்கு டாக் பேக் (Talk Back)-ல் எல்லாரும் சிரிக்கும் சத்தம் கேட்டது. 'தப்பாக பாடிவிட்டேனா?' என்ற பதட்டத்தில் நான் பாடல் வரிகளை சரி பார்த்து கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு தெலுங்கு சரியாக தெரியாது. எஸ்.பி.பி. அவரிடம் கேட்கலாம் என திரும்பிய போது அவர் வேறு ஒரு பக்கம் உட்கார்ந்து சிரித்து கொண்டு இருந்தார். நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது உதவி இயக்குநர் உள்ளே வந்து சிரித்து கொண்டே, 'என்ன எழுதியிருக்கிறீர்கள்?' என கேட்டார். அப்போதுதான் எஸ்பிபி, 'நான்தான் அவளை கிண்டல் செய்ய திட்டும்படியான வார்த்தைகளை சங்கதிகேற்ப எழுதி கொடுத்தேன்' என சிரித்தார். இதை நான் மறக்கவே மாட்டேன்.

இன்னொரு சம்பவமும் உண்டு. ஒருமுறை நான், ஷைலஜா, சரண், பாடகர் கிருஷ்ணா நாங்கள் நால்வரும் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது கோரஸ் பாட யாரும் இல்லை. நாங்களே அதற்கான பயிற்சியும் எடுத்து பாடினோம். அப்போதெல்லாம், விருப்பப்பட்ட பாடலை பாடச்சொல்லி ரசிகர்களிடம் இருந்து துண்டு சீட்டு வரும்.

அதில் ஹரிஹரனும், நானும் பாடிய 'உயிரே உயிரே' பாடலும் இருந்தது. ஹரிஹரன் அங்கு இல்லை என்பதால், நான் அதிக பிரசிங்கதனமாக பேசி எதுவும் செய்துவிட வேண்டாம் என நான் பாடவில்லை. அது எஸ்.பி.பி. அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். நிகழ்ச்சியின் கடைசி நாளில் என்னென்ன பாடல் பாட வேண்டும் என்ற பட்டியல் எங்களுக்கு வந்திருந்தது.

அதில் ஒரு இடத்தில் பாடல் விடுபட்டிருந்தது. 'என்னவாக இருக்கும்?' என நானும் ஷைலஜாவும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென 'உயிரே' பாடலுக்கான இசை வாசிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் அந்த பாடலின் இரண்டாம் பாதியில் இருந்து நான் பாட வேண்டும்.

ஆனால், என்னிடமோ அதுகுறித்து எதுவும் சொல்லவே இல்லை. எனில், 'யார் பாட இருக்கிறார்கள்? எஸ்.பி.பி. அவர்களே முழுபாடலையும் பாட இருக்கிறாரா?' என பல கேள்விகளோடு மேடையின் பின்னிருந்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது எஸ்.பி.பி. சார், நான் பாட வேண்டிய இடம் வந்ததும் திரும்பி, 'சித்ரா வா' என கூப்பிட்டார்.

எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. பாடல் முடிந்ததும், 'நிகழ்ச்சிக்காக அவர்கள் இதுவரை பாடாத விஷயங்களை கூட கற்றுக்கொண்டு பாடினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த நன்றி' என 'உயிரே' பாடல் நான் பாடாததற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதையும் சொன்னார். கண்கலங்கி விட்டேன்.

அவர் நினைத்திருந்தால் இதெல்லாம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. தான் சீனியர் என்றெல்லாம் நினைக்காமல் எதையும் இறங்கி வந்து செய்யக்கூடியவர். அதுதான் எஸ்.பி.பி.".

கே: அவர் வம்பிழுக்கிறார் என எப்போதாவது உங்களுக்கு வருத்தம் இருந்திருக்கிறதா?

பாடகி சித்ரா

பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

"நிச்சயமாக இல்லை. ஒருமுறை வெளிநாட்டில் இசைக்கச்சேரிக்காக சென்றிருந்தோம். அப்போது ஒரு தெலுங்கு பாடல் பாடிவிட்டு அடுத்து மலையாள பாடல் பாட இருந்தோம். பாடல் மட்டுமே பாடிக்கொண்டிருக்காமல், ரசிகர்களுக்காக இடையிடையே மேடையில் உரையாடலும் நடத்துவோம். அப்படி எஸ்.பி.பி. அவர்கள் அடுத்து நாங்கள் பாடவிருக்கும் மலையாள பாடலுக்கான அர்த்தத்தை ஆங்கிலத்தில் என்னை சொல்ல சொன்னார். நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.

அந்த பதற்றத்தில் பல மலையாள வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் என்னவென்று எனக்கு உடனே நினைவுக்கு வரவில்லை. என்னுடைய பதற்றத்தை பார்த்த ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பாட்டெல்லாம் பாடிமுடித்து, மேடைக்கு பின்னால், 'சித்ரா, இதற்கெல்லாம் வருத்தப்படாதே. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்ததான்' என சொல்வார். அது எனக்கு புரியும். அதனால் வருத்தமில்லை".

கே: எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடியதில் உங்களுக்கு மிகவும் சவாலான பாடல்?

"நிறைய பாடல்களை சொல்லலாம். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'அஞ்சலி அஞ்சலி' பாடல். இருவரும் தனித்தனியாகதான் இந்த பாடலை பாடினோம். பெரும்பாலும் ரஹ்மான் அவர்களுடைய இசையமைப்பில் பாடிய பாடல்கள் தனித்தனியாகதான் பதிவு செய்தோம்".

  கே: பாடகர், இசையமைப்பாளர், நடிகர், வாய்ஸ் ஆர்டிஸ்ட் என எஸ்.பி.பி. அவர்களுக்கு நிறைய முகங்கள் உண்டு. உங்களுக்கு பிடித்த எஸ்.பி.பி. இதில் எது?

  "பாடகராகவும், இசையமைப்பாளராகவும் அவரை அதிகம் பார்த்துள்ளேன். அவருடைய இசையிலும் சில பாடல்கள் பாடியுள்ளேன். கோவிட் காலத்தில் கடினமாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என இந்த சமயத்தில் கடினமாக உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தெலுங்கில் ஒரு பாடலை அவர் இசையமைத்து உருவாக்கினார்.

  மலையாளத்திலும் இந்த பாடல் இருக்க வேண்டும் என உச்சரிப்பிற்காக பதிவு செய்து என்னை அனுப்ப சொல்லியிருந்தார். பிறகு நானே அந்த பாடலை வீட்டில் இருந்து பதிவு செய்து அனுப்பினேன். அவர் போவதற்கு முன்னால் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த பாடல் அமைந்துவிட்டது".

  கே: எஸ்.பி.பி. அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம்?

  எஸ்பிபி & சித்ரா

  பட மூலாதாரம்,INSTAGRAM_KSCHITHRA_

  "தொழில் மேல் அவருக்கு உள்ள பக்தி, ஈடுபாடு. பாடகராக மட்டுமில்லை, ஒரு மனிதராகவும் அனைவர் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டவர். தொழில்ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், நான் முன்பெல்லாம் பாடல் பதிவின் போது இசையமைப்பாளர், பாடல் என எனக்கு தேவையான விஷயங்களை மட்டுமே குறித்து வைப்பேன். ஆனால், எஸ்.பி.பி. அவர்கள் இசையமைப்பாளர், பாடல், பாடகர், தேதி, ஸ்டுடியோ என அனைத்து விஷயங்களையும் குறித்து வைப்பார். அதை நானும் பின்தொடர்ந்தேன்"

  கே: கடைசியாக எப்போது அவரை சந்தித்தீர்கள்?

  "கொரோனா காலத்திற்கு முன்பு நடந்த ஒரு இசைக்கச்சேரியில்தான். "எல்லாருடனும் அன்பாகவும், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க கூடிய ஒருவர் எஸ்.பி.பி. எந்தவொரு இசைக்கச்சேரி, நிகழ்ச்சி என்றாலும் அவரை தவிர்த்துவிட்டு நடத்த முடியுமா என யோசிக்க வைக்கும் அளவிற்கு மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை எடுத்து செல்வார்.

  தெலுங்கில் சில நிகழ்ச்சிகளில் அவருடன் பணியாற்றியுள்ளேன். இப்போது அவர் இல்லாமல் எப்படி அந்த நிகழ்ச்சி நடக்கும் என நினைக்க வைக்கும் அளவிற்கு அங்கு அனைவரிடமும் அன்பாக இருந்திருக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து பாடல் பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றினோம். இப்போது அதை நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

  கடந்த வருடம் அவர் பிறந்தநாளின் போது பேசும்போது கூட, கேரளாவில் இருந்து பலரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தொலைபேசியில் அழைத்திருந்தார்கள். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக மலையாளத்தில் எழுதி கொடு என என்னிடம் கேட்டிருந்தார். ஆனால், இந்த வருடம் அவர் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போதும் அவர் பாடல்களால் நம்மோடு இருப்பார்".