ஆலையடிவேம்பு பிரதேச கொவிட் செயலணி இன்று அவசரமாக ஒன்று கூடியது


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு பிரதேச கொவிட் செயலணி இன்று அவசரமாக ஒன்று கூடி பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமாண்டர் ஏ.எம்.சி.அபயகோன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய பதில் அதிகாரி எஸ்.அகிலன் பிரதே சபை தவிசாளர் த.கிரோஜாதரன் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய கொவிட் தடுப்பு செயலணிக்கான பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதுமாக இன்று இரவு முதல் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் மக்களது செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் பிரதேச செயலகத்தின் மூலமாக கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை நடமாடும் சேவை மூலம் பெற்றுக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மக்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு தேவையற்ற விதத்தில் நடமாடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதேநேரம் கல்முனை பிராந்தியத்தில் கொரோனாவின் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாளொன்றுக்கு 6 பேர் வரை மரணிக்கும் நிலை உருவாகியுள்ளதாக வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை பராமரிப்பு நிலையங்களில் இடமின்றி நோயாளிகள் தத்தம் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறும் நிலையும் உருவாகியுள்ளதாக கூறினார். ஆலையடிவேம்பிலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பதாகவும் மக்கள் பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபையினால் முடிந்த உதவிகள் இக்காலகட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தெரிவித்ததுடன் முழு ஆதரவையும் வர்த்தகர் சங்கம் வழங்கும் என சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்