வைத்தியர் யு.எல்.எம்.சகீல் தாக்கப்பட்டதன் விளைவாக, சேவை வழங்கப்படாத பனங்காடு பிரதேச வைத்தியசாலை வி.சுகிர்தகுமார் 0777113659 


அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களாக வைத்திய சேவை வழங்கப்படாத நிலையில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் பெருங்கவலை அடைந்துள்ள நோயாளர்களும் பொதுமக்களும்  வைத்தியசாலையினை திறந்து மக்களுக்கான வைத்திய சேவை இடம்பெற உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனிடையே இன்று வைத்தியசாலையின் முன்பாக ஒன்று சேர்ந்த பனங்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆர்.சுவர்ணராஜ் தலைமையிலான சிலர் வைத்தியசாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் மேற்கொள்ள வேண்டும் என ஊடகங்கள் முன் கோரிக்கை முன் வைத்தனர்.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் யு.எல்.எம்.சகீல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பின்மை காரணமாக அவர் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.

இந்நிலையில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் ஊழியர்களும் மேற்கொண்ட உரிய நடவடிக்கை காரணமாக குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும்  தாமும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் பொதுமக்களும் சம்பவம்  தொடர்பில் கவலை அடைந்துள்ளதுடன் சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டத்தை தெரிவிப்பதாகவும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் கூறினர்.

இதேநேரம் சட்டம் தன் கடமையை செய்யும் எனும் நம்பிக்கையில் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் வைத்தியசாலை ஊழியர்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலத்தில் சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே குறித்த வைத்தியசாலையில் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் இன்றும் வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காத நிலையில் வைத்தியசாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அங்கு கைக்குழந்தைகளுடனும் நோயுடனும் தூரப்பிரதேசங்களில் இருந்து சென்ற பலர் இன்று ஏமாற்றதுடன் வீடு திரும்பினர்.

எவ்வாறாயினும் பொதுமக்களுக்கான வைத்திய சேவை இடம்பெறாத நிலையில் சுமார் 15இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆகவே இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.