"பெரும் செலவுகள் காரணமாக இலங்கை மற்றும் ஆர்ஜென்டீனாவின் நிலைக்கு அவுஸ்திரேலியா தள்ளப்படக்கூடும்"


 


பெரும் செலவுகள் காரணமாக இலங்கை மற்றும் ஆர்ஜென்டீனாவின் நிலைக்கு அவுஸ்திரேலியா தள்ளப்படக்கூடும் என அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜீனா ரைன்ஹார்ட் எச்சரித்துள்ளார்.

பெரும் சுரங்கத் தொழில்துறை நிறுவன அதிபரான ஜீனா ரைன்ஹார்ட்டின் (Gina Rinehart )  செல்வ மதிப்பு சுமார் 31 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்த மாதம் வெளிவரவுள்ள நூல் ஒன்றில் எழுதிய கட்டுரையில் இலங்கையின் நிலைக்கு அவுஸ்திரேலியா தள்ளப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

‘Australia Tomorrow’ எனும் இந்நூல் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டொனி அபோட், தற்போதைய பிரதிப் பிரதமர் பார்னபி ஜோய்ஸ் உட்பட பலரின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலியாவின் கடந்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 167 பில்லியன் டொலர்களாக இருந்தது. இந்நிலையில், எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலிய அரசு நிதிசார் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜீனா ரைன்ஹார்ட் (67) வலியுறுத்தியுள்ளார்.

‘தலைமுறை தலைமுறையாக எமது பிள்ளைகளுக்கு நாம் மேலும் சிறந்த நாட்டை கையளிக்க விரும்புகிறோம். ஆனால், இது தற்போது அச்சுறுத்தலில் உள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குறித்து மேற்படி கட்டுரையில் எழுதியுள்ள ஜீனா ரைன்ஹார்ட்,

“தனது தேயிலைப் பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய விவசாயங்கள் சகிதம் ஒரு காலத்தில் சுபீட்சமாக இருந்த சிலோனை (இலங்கையை), ‘இது இலவசம், அது இலவசம்’ என்ற  அரசியல் கவர்ச்சிகர வார்த்தைகளும், இதற்கு, அதற்கு என மக்களின் வரிப்பணத்தை செலவழித்தமையும், உணவுக்குக்கூட சுயமாக தங்கியிருக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டன” என ஜீனா ரைன்ஹார்ட்  என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜென்டீனா குறி;த்தும் ஜீனா ரைன்ஹார்ட் குறிப்பிட்டுள்ளார். 1913 ஆம் ஆண்டில் தலா வருமானத்தில் உலகின் 10 ஆவது செல்வந்த நாடாக இருந்த ஆர்ஜென்டீனா தற்போது அரசியல் ஸ்திரமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடுன் 42 சதவீதமானோர் வறுமைக் கோட்டில் உள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

சோஷலிசத்தின் சீரழிவான விளைவுகள் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாத்திரம் நீடிப்பதில்லை. அவை மிக மிக நீண்ட காலத்துக்கு நீடிக்கின்றன என அவர் எழுதியுள்ளார்.