காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது


 


தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது.

காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மரபுசார் எரிபொருட்களை நம்பியுள்ளதால், அவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

புகைப் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற


உணவை உட்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு நிகராக காற்று மாசுபாட்டை வைத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

வரும் நவம்பர் மாதம் COP26 உச்சி மாநாடு நடக்கவுள்ளது. அதற்குள், 194 உறுப்பு நாடுகளையும் தங்களின் நச்சுக் காற்று உமிழ்வைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலில், பி எம் 2.5 நுண்துகள்களின் அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நுண் துகள்கள் மின்சார உற்பத்திக்காக எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும், வீடுகளில் வெப்பமூட்டும் அமைப்புகளாலும், வாகனங்களின் இன்ஜின்களாலும் உருவாகின்றன.


"தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு காற்று மாசுபாடுகள் குறைக்கப்பட்டால், பி எம் 2.5 நுண் துகள்களால் ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தைத் தவிர்க்கலாம்" என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதோடு பி எம் 10 என்கிற நுண் துகள்களின் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவும் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டுக்கும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளது. குழந்தைகள் மத்தியில் காற்று மாசுபாடு நுரையீரலின் வளர்ச்சியைக் குறைத்து, ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.

"காற்றின் தரத்தை உயர்த்துவது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுக் காற்று உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சுற்றுசூழல் பகுப்பாய்வாளர் ரோஜர் ஹரபினின் பகுப்பாய்வு

ஒவ்வொரு தசாப்தத்திலும் மெல்ல பாதுகாப்பான மாசுபாட்டு அளவு குறைக்கப்பட்டு வருகிறது.

Air pollution: Even worse than we thought - WHO

பட மூலாதாரம்,REUTERS

இதய நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது செய்தியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த நச்சுப் பொருட்கள் மற்றும் வாயுக்கள் முன்பு கருதியதை விட குறைந்த வயதிலேயே மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

மிக ஆபத்தான மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருப்பதை விட, பிரிட்டனின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது நான்கு மடங்கு அதிகம்.

கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துகள்களை, நுரையீரலுக்குள் இழுத்து சுவாசிப்பதை நிறுத்துவது தான் மிகப் பெரிய பிரச்னை. அதை நிறுத்துவது மிகவும் கடினம்.

வாகனங்கள் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளிலால் காற்று மாசுபடுகிறது. ஆனால் மனிதர்களை பாதிக்கும் நுண் துகள்கள் மற்ற சில வழிகள் மூலமாகவும் காற்றில் கலக்கின்றன அல்லது வேதிப் பொருட்களோடு வேதிவினை ஏற்படும் போது காற்றில் உருவாகிறது.

பெயின்ட்கள், சுத்தம் செய்யும் திரவங்கள், சால்வென்ட்கள், வாகனங்களின் டயர்கள், பிரேக் பாகங்கள் போன்றவைகள் நுண் துகள்களின் தோற்றுவாய்களாக இருக்கின்றன. எனவே மின்சார வாகனங்கள் கூட ஒரு கச்சிதமான தீர்வைக் கொடுக்க முடியாது.

நீங்கள் நகரத்தில் வாழ்கிறீர்கள் என்றால், என்னதான் முயற்சி செய்தாலும் மாசுபாட்டிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.