மதுபான விற்பனை நிலையங்கள் திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


 


தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, இன்று (19) கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார பாதுகாப்பு ஆடைகளை அணிந்தவாறு  சுமார் 20 பேர் வரையில் இணைந்து சமூக இடைவெளியைப் பேணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


சகபாடிகளுக்கு மது விருந்து, பொது மக்களுக்கு கடுங் கஷ்டம், மதுபான விற்பனை நிலையங்கள் அத்தியாவசிய சேவையா?, பணக்காரர்களுக்கு பார்டி – ஏழைகலுக்கு துன்பம், பல்பொருள் அங்காடிகள் திறப்பு – நடைபாதை வர்த்தகர்கள் தவிப்பு உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது குறித்த இடத்திலிருந்த கோட்டை பொலிஸ் நிலைய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ‘ இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது.’ என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது  கோஷங்களை முன் வைத்துக்கொண்டிருந்த போது திடீரென பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றினர். பின்னர் இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்தனர்.