தென்னம் பிள்ளைகளை துவம்சம் செய்துள்ள, யானைக் கூட்டம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு மற்றும் இத்தியடி பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தென்னம் தோப்பினுள் நேற்றிரவு(05) நுழைந்த யானைக் கூட்டம் பயன்தரு தென்னம் பிள்ளைகளை துவம்சம் செய்துள்ளதுடன் வாழை உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்துள்ளது.

நேற்றிரவு தென்னம் தோப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்நுழைந்த யானைகளை விரட்டுவதற்காக அங்குள்ள பலர் முயற்சித்தபோதும் அது கைகூடாமல் போயுள்ளது. மாறாக யானைகள் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கவே முயற்சித்துள்ளது.

இதனால் கவலையடைந்துள்ள தென்னம்தோப்பின் உரிமையாளர்கள் முயற்சியை கைவிட்ட நிலையில் யானைகளால் தென்னங்கன்றுகள் பிடிங்கி எறியப்பட்டதுடன் சில தென்னங்கன்றுகளின் குருத்துக்களையும்  இழுத்துச் சென்றுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் தமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இல்லையேல் தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் தென்னம் தோப்பினையும் பயிர்ச்செய்கையினையும் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டனர்.

இதுபோன்ற தென்னம் தோப்பினை உருவாக்க குறைந்தது 10வருடங்களாவது தேவைப்படும் எனவும் கவலையுடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

ஆகவே பொதுமக்கள் மீது அதிக கரிசனை காட்டும் அரசாங்கமும் சம்மந்தப்பட்டவர்களும் உடன் தலையீடு செய்து மின்சார வேலியினை அமைத்து தென்னம் தோப்பினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பகுதிக்கு மின்சாரத்தை வழங்கி ஒளியூட்டி மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அங்குவாழும் மக்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதுடன் குறித்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.