விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது


 


மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பிபிசியிடம் பேசுகையில், "விண்டோஸ் 11 சமீபத்திய பதிப்பு பயனருக்கு "புதிய மற்றும் எளிமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.

இந்த புதிய இயங்கு முறை, தற்போதைய பயன்பாட்டு முறையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

சமீபத்திய இயங்குதளத்தை பயன்படுத்துபவர் தொழில்நுட்ப ரீதியாக அதிக ஆற்றலைக் கொண்டிருக்காவிட்டாலும், அவரால் இதை இயக்கும் வகையில் இதன் வசதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றார் பனோஸ் பனாய்.

"நான் என் தந்தையின் ஃபிரேமை பயன்படுத்துகிறேன் - அவருக்கு வயது 89," என்று கூறிய பனோஸ், "இயங்குதள மேம்பாட்டுக்கான பொத்தானை அழுத்தும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உணர்வு உங்களுக்குத் தெரியாது," என்று கூறி நெகிழ்ச்சியடைந்தார

  "காரணம், இனி இது எனது அப்பாவுக்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்றார் பனோஸ்.

  விண்டோஸ் இன்சைடர் சோதனை ஓட்டம் மூலம் இந்த இயங்குதளம் விரிவாக பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் ஆரம்பகால பிரச்னைகள் எதுவும் இதில் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதாகவும் பனோஸ் கூறினார்.

  ஸ்டார்ட் பட்டனில் எல்லாமே உள்ளது

  விண்டோஸ் 11 சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது, இயல்பாக, ஸ்டார்ட் மெனு டாஸ்க்பாரில் உள்ள ஐகான்களுடன் திரையில் மையமாக இருக்கும். ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்யும் போது, அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல் மெனுவில் தோன்றும்.

  ஒரு வகையில் இது திறன்பேசி செயலிகளை திறப்பது போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கிறது. விண்டோஸ் 10இல் காணப்படும் டைல்ஸ்களை 11இல் மைக்ரோசாஃப்ட் கைவிட்டுள்ளது.

  "விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் ஸ்டார்ட் மெனு முற்றிலுமாக விடுபட்டிருந்தது, பல பயனர்களை வருத்தப்படுத்தியது. அதை படிப்பினையாகக் கொண்டு எங்களை திருத்திக் கொண்டுள்ளோம்," என்கிறார் பனோஸ்.

  மைக்ரோசாப்ஃட் விண்டோஸ் 11

  பட மூலாதாரம்,GETTY IMAGES

  படக்குறிப்பு,

  விண்டோஸ் மற்றும் சாதனங்களுக்கான மைக்ரோசாப்டின் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனே

  "விண்டோஸ் 11-ஐ உருவாக்கும்போது, பயனர்கள் தங்களுடைய கணினிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? அவர்களுடைய பார்வை எதை மையமாகக் கொண்டிருக்கும்? அவர்கள் எதை கிளிக் செய்வார்கள் போன்றவற்றை பரிசோதனை கூடத்தில் விரிவாக ஆராய்ந்து செயல்படுத்தினோம்."

  "வரலாற்றில் இருந்து இவற்றை நாங்கள் கற்றுக்கொண்டோம். விண்டோஸ் 11இல், ஸ்டார்ட் பட்டன் திரையின் நடுவில் இருக்கிறது. அது எங்கும் போகவில்லை," என்றார் பனோஸ் பனே.

  'புதிய சகாப்தம்'

  விண்டோஸ் 10 வெளியானபோது, இதுவே எங்களுடைய கணினி இயங்குதளத்தின் "கடைசி பதிப்பு" என்று ​​மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

  "கணிப்பொறிகளைப் பொருத்தவரை, இப்போது நாம் ஒரு புதிய சகாப்தம் நடக்கும் நேரத்தில் இருக்கிறோம். அதை குறிக்கும் தருணத்தை விண்டோஸ் 11 முத்திரை உறுதிப்படுத்துகிறது."

  இயங்குதளத்தின் வடிவமைப்புகள், வட்டமான மூலைகளை கொண்டுள்ளன. பெரும்பாலான மெனுக்கள், கோப்புறை (ஃபோல்டர்) காட்சிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. திரையில் தென்படும் விண்டோஸ்களை கட்டங்களாக பிரிக்கும் வசதியை புதிய, மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் கொண்டுள்ளது.

  2007இல் வெளிவந்த விண்டோஸ் விஸ்டாவின் ஒரு முக்கிய விற்பனை அம்சமமான விட்ஜெட்டுகள், ஃபுளோட்டிங் பாருக்கு பதிலாக, சைட் பார் ஆக இருக்கும். அவை மைக்ரோசாஃப்ட் சேவைகளின் லிங்க்குகளுக்கு பயனரை அழைத்துச் செல்லும் பாலமாக இருக்கும்.

  மைக்ரோசாப்ஃட் விண்டோஸ் 11

  பட மூலாதாரம்,MICROSOFT

  படக்குறிப்பு,

  வழக்கமான டெஸ்க்டாப்பில் உள்ளதை விட ஒரே பக்க பேனலில் உள்ள அனைத்து தரவையும் விட்ஜெட் பேனல் வைத்திருக்கிறது

  மைக்ரோசாப்ட் டீம்களுக்கான சிஸ்டம் ஒருங்கிணைப்புகள் - ஸ்கைப் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஆப் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும் என மைக்ரோசாப்டின் விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

  மைக்ரோசாப்ட் ஸ்டோர் எனப்படும் ஆப் ஸ்டோரின் விண்டோஸ் பதிப்பு - முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தணிக்கையின்றி மூன்றாம் தரப்பு மென்பொருளை பயனர் தடையின்றி நிறுவ வசதி வழங்கப்பட்டுள்ளது.

  தொழில்நுட்ப உலகில் புருவங்களை உயர்த்தும் முக்கிய அம்சமாக, ஆண்ட்ராய்டு திறன்பேசி செயலிகளை அமேசான் ஆப் ஸ்டோர் மூலம் இயக்கும் வசதியை விண்டோஸ் 11 கொண்டுள்ளது.

  இதை பயன்படுத்தத் தொடங்கியவர்கள், புதிய பதிப்பின் 'உள்ளமைக்கப்பட்ட தேடல் செயல்பாடு' கணிசமான வேகத்தை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். அதே சமயம், இணையத்தில் ஒன்றை தேடும்போது, மைக்ரோசாப்டின் சொந்த சேவைகளான பிங் மற்றும் எட்ஜ் ப்ரெளசர்களைின் சேவையை இயங்குதளம் ஊக்குவிக்கிறது என்று விண்டோஸ் 11 புதிய பயனர்கள் கூறுகின்றனர்.

  நேரத்தை மேம்படுத்தும் வசதி

  கேமிங் ஆர்வலர்களுக்கு நற்செய்தியாக, மைக்ரோசாப்ட் தனது புதிய தொழில்நுட்பமான டைரக்ட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கியிருக்கிறது.

  சென்ட்ரல் ப்ராசசர் வழியாக இல்லாமல், நேரடியாக ஸ்டோரேஜ் டிரைவர்களை கிராபிக்ஸ் கார்டு அணுகும் வசதி விண்டோஸ் 11இல் உள்ளது. இது கேமிங் செயலி வேகமாக திறக்க வழியை ஏற்படுத்தும். ஆனால், எல்லா கணிப்பொறியிலும் இது முடியுமா என கூற முடியாது. நவீன கணிப்பொறிகளில் மட்டுமே இடம்பெறக்கூடிய டிபிஎம் எனப்படும் செக்யூரிட்டி சிப் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.

  புதிய இயங்குதளத்தின் வசதிக்கு ஈடுகொடுக்கும் வகையிலான புதிய வன்பொருள் சாதனங்களையும் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், விண்டோஸ் 10 வைத்திருக்கும் பயனர் இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அவர் நேரடியாக விண்டோஸ் 11 இயங்குதளத்தை தடையின்றி மேம்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டிருப்பவர்கள், 2025ஆம் ஆண்டுவரை பாதுகாப்பு புதுப்பிப்புகளை தானியங்கி முறையில் மேம்படுத்திக் கொள்ளும் வசதியை மைக்ரோசாஃப்ட் வழங்கியிருக்கிறது.

  மேம்பாட்டுக்கான திறன் உள்ளதா என்பதை எப்படி அறிவது?

  விண்டோஸ் 10க்கு கீழ் உள்ள இயங்குதளத்தை கொண்டிருக்கும் பயனர், தங்களுடைய கணிப்பொறியில் செட்டிங்ஸ் > அப்டேட் அண்ட் செக்யூரிட்டி > விண்டோஸ் அப்டேட் - என கிளிக் செய்ய வேண்டும்.

  உங்களுடைய கணிப்பொறியில் போதிய ஸ்டோரேஜ் வசதி, ப்ராசசர் வசதி இருந்தால் உங்களால் விண்டோஸ் 11 இயங்குதள பதிவிறக்க லிங்கை டவுன்லோடு செய்து உங்களுடைய கணிப்பொறி இயங்குதளத்தை எளிதாக மே்படுத்திக் கொள்ள முடியும்.