ஐபிஎல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது ராஜஸ்தான்


 ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள போராடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய (அக் 02, சனிகிழமை) போட்டி ஐபிஎல் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

189 ரன்களை அடித்துவிட்டு அனாயாசமாக இருந்த சென்னைக்கு எதிராக, 15 பந்துகளுக்கு முன்பே 190 ரன்களைக் குவித்து வெற்றி பெற்று ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது ராஜஸ்தான்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்தது. ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசியின் தொடக்கம் சராசரியாக இருந்தது. 6.5 ஓவரில் 25 ரன்களுக்கு வெளியேறினார் டூப்ளசி.

அவரைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ரன்களுக்கும், மொயின் அலி 21 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

கடைசியாக ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளுக்கு 32 ரன்கள் அடித்து சென்னை ஸ்கோரை எகிர வைத்தார். மறுபக்கம் முதல் ஓவரில் களமிறங்கிய ரிதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழக்காமல் மாஸ் காட்டினார்.

சென்னை தரப்பில் டூப்ளசி - ரிதுராஜ் இணை 41 பந்துகளுக்கு 47 ரன்களும், மொயின் அலி - ரிதுராஜ் ஜோடி 36 பந்துகளுக்கு 57 ரன்களும், ஜடேஜா - ரிதுராஜ் ஜோடி 22 பந்துகளுக்கு 55 ரன்களையும் குவித்து சென்னை ரசிகர்களை சிலிர்க்க வைத்தனர்.

ரிதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

ரிதுராஜ் கெய்க்வாட்

20 ஓவர் முடிவில் 189 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை. இதில் 16 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடக்கம்.

முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 4 ஓவர்களில் 51 ரன்கள் பறிபோனது. ராகுல் தீவாட்டியா டூப்ளசி, ரெய்னா, மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார்.

டார்கெட் 190

ஐபிஎல் 2021 சீசனில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டிகளில், இதுவரை 189 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள் என்பதால் ராஜஸ்தான் வெல்வது கடினம் என்கிற எண்ணத்தோடு தான் ரசிகர்கள் பலரும் இருந்தனர்.

ஆனால் ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லெவிஸ் ஆடத் தொடங்கிய சில ஓவர்களிலேயே, ராஜஸ்தான் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பது போலத் தெரிந்தது.

பவர் ப்ளேவில் மட்டும் ராஜஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களைக் குவித்தது, ஐபிஎல் ரசிகர்களை 'அட' போட வைத்தது. அப்போதே கிட்டத்தட்ட ஆட்டம் ராஜஸ்தான் கைக்குச் சென்றுவிட்டது எனலாம்.


மிகவும் சிரமப்பட்டு ஷர்துல் தாகூர் 5.2ஆவது ஓவரில் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி, 32 பந்தில் 77 ரன்களைக் குவித்திருந்த லெவிஸ் - ஜெய்ஸ்வால் ஜோடியை பிரித்தார். லெவிஸ் 12 பந்தில் 27 ரன்களை விளாசி இருந்தார்.

புதிதாக களமிறக்கப்பட்டிருந்த கே எம் ஆசிஃப் 6.1ஆவது பந்தில் அரை சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி சென்னை ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

இதன் பிறகு ராஜஸ்தானின் வேகமும் ரன்ரேட்டும் குறையலாமென எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சஞ்சு சாம்சன் - சிவம் தூபே ஜோடி நிதானமாக பவுண்டரிகளை விளாசத் தொடங்கினர். இந்த இணை 58 பந்துகளுக்கு 89 ரன்களைக் குவித்தது.

மீண்டும் ஷர்துல் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி கொஞ்சம் சென்னை பக்கம் ஆட்டத்தை திருப்ப முயன்றார். ஆனால் மறு முனையில் சிவம் தூபே பவுண்டரிக்கும் சிக்ஸருக்கு சென்னை வீசிய பந்துகளை பார்சல் செய்து கொண்டிருந்தார்.

அவரோடு 15.5ஆவது ஓவரில் களமிறங்கிய க்ளென் ஃபிலிப்ஸ் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களைக் குவித்தது ராஜஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ராஜஸ்தான் தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை அருமையாக தக்க வைத்துக் கொண்டது.

17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்து. இதில் 17 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடக்கம்.

சென்னை சறுக்கியது எங்கே?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 1.4ஆவது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்த நல்ல கேட்சை தவறவிட்டார் அம்பதி ராயுடு. அப்போதே அவரை வீழ்த்தி இருந்தால் 14 ரன்களோடு அவரை பெவிலியன் அனுப்பி இருக்கலாம்.

சென்னை அணியில் ட்வெயின் ப்ராவோ, தீபக் சாஹர் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது பேரிழப்பானது. போட்டி நிறைவடைந்த பிறகு தோனியே இது குறித்து வருத்தம் தெரிவித்தார். சென்னையால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தவோ, ராஜஸ்தானின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அது போக சென்னையின் ஃபீல்டிங்கும் அத்தனை தரமாக அமைக்கப்பட்டிருக்கவில்லை.

தொடக்கத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச், போகப் போக பேட்டிங்குக்கு சாதகமானது. இதற்கு டியூவும் ஒரு காரணம் என தோனியே குறிப்பிட்டிருந்தார்.

பவர்ப்ளே ஓவர்களில் சென்னை 44 ரன்களைக் குவித்திருந்தது, ஆனால் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்களைக் குவித்தது. சாம் கரன், ஹேசில்வுட், ஷர்துல் ஆகியோர் தலா இரு ஓவர்களை பவர் ப்ளேயில் வீசினர். இதில் சாம் கரன் 25 ரன்களும், ஹேசில்வுட் 38 ரன்களும், ஷர்துல் 18 ரன்களும் கொடுத்தனர். ஆட்டம் அப்போதே ராஜஸ்தான் வசமாகிவிட்டது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் வென்றதால் புள்ளிகள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 7ஆவது இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ப்ளே ஆஃபில் விளையாடும் வாய்ப்பிருக்கிறது.