13 பிளஸ் தொடர்பாக யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை





 வி.சுகிர்தகுமார்


  அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நேற்று(17) மாலை நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய முன்பாக இடம்பெற்ற அம்பாரை மாவட்ட முன்னாள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கல்முனை மநாகர சபை உறுப்பினர் மு.சந்திரசேகரம் ஆலையடிவேம்பு பிரதேச தமிழரசுக்கட்சியின் தலைவர் ஆர்.ஜெகநாதன் ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆலய தலைவர்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு சம்கவங்களின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் நினைவுச்சுடர்களை ஏற்றி வைத்தனர்.
பின்பு உயிர்நீத்த உறவுகளின் ஆத்மாசாந்தி வேண்டி இரு நிமிட பிரார்த்தனையும் இடம்பெற்றது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய  கல்முனை மநாகர சபை உறுப்பினர் மு.சந்திரசேகரம் தற்போதைய பிரதமர் இறந்தவர்களை நினைவு கூர தடையில்லை என்றார். ஆனால் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை நடத்த முடியாது இராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர் என்றார். அவர்கள் எவ்வாறு தடையினை வைத்தாலும் சகல மக்களும் வீடுகளில் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இங்கு உரையாற்றிய முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்தராஜ பக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும்போது 13 ஆவது திருத்த சட்டத்திற்கு மேல் சென்று வடகிழக்கு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவேன் என உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்; கூறினார். ஆனாலும் இதுவரையில் 13 பிளஸ் தொடர்பாக யுத்தம் முடிவடைந்து மக்களை பலிகொண்டு 13 வருடங்கள் நிறைவடைந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  
இந்த நிலையில் சிங்கள மக்களே இன்று அவரை துரத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அன்று தமிழ் மக்கள் பட்டதுயரை அவர் இன்று அனுபவிக்கின்றார். அன்று அவர் வடகிழக்கிலே வாழ்ந்த மக்களை துரத்தி அடித்தார். ஆனால் இன்று வடகிழக்கின் தாயகமான திருகோணமலையிலே அவர் தஞ்சம் புகுந்துள்ளார். மக்கள் இறைவனிடம் வேண்டிகொண்டதற்கிணங்க இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.