கல்முனை அல் பஹ்ரியா தபிர்லியன்ட் பார்க் திறந்து வைப்பு





 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் பூரண அணுசரனையுடன் பாடசாலை முகப்புப் பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட "BRILLIANT PARK"  வேலைத்திட்டத்தை திறந்து வைத்து பாடசாலைக்கு கையளிக்கும்  நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது.

அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையில் கொடியேற்றும் கம்பம் மற்றும் நவீன பார்க் முறைமை இல்லாத குறையினை கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நிறைவேற்றியுள்ளது. கடந்த காலங்களில் இவ் விளையாட்டுக் கழகம் இப்பாடசாலையில் கல்வி மற்றும் பெளதீக சார் வேலைத்திட்டங்களில் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"BRILLIANT PARK"  வேலைத்திட்டத்தை திறந்து வைத்து பாடசாலைக்கு கையளிக்கும்  நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப்.நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ அஸ்தர், பாடசாலை பழைய மாணவிகள் சங்க பிரதித்தலைவரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். பழில், அக்கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.