மகத்தான பிரியாவிடை





 ( வி.ரி.சகாதேவராஜா)


முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் ஓய்வு பெறுவதையொட்டி பரவலாக பிரியாவிடை நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம் பெற்று வருகின்றது.

36 வருடகால அரச சேவையில் இருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரின் சேவையினைப் பாராட்டியும் வாழ்த்தியும் அவருக்கான பிரிவு உபசார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு கல்லடியைச்சேர்ந்தவர். சிறந்த விளையாட்டு வீரரான இவர் சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

இலங்கை நிர்வாக சேவையில் 32 வருடகாலம் சேவையாற்றிய இவர் முந்திய 04 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஆறு வருட காலமாக சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் பிரியாவிடை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மகத்தான பிரியாவிடை வைபவம் கடந்த வாரம் நடாத்நப்பட்டது.

இந்த நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி தலைமையில் இடம்பெற்றது. தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் நிகழ்வுடன் அரசாங்க அதிபர் மற்றும் அவரின் பாரியார் திருமதி மதிலதா இருவரும் வரேவேற்று அழைத்துவரப்பட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவை தொடர்பில் பிரதேச செயலாளரால் பாராட்டுக் கருத்துரை வழங்கப்பட்டது. அரசாங்க அதிபரை கௌரவப்படுத்தும் நோக்கில்  வாழ்துப்பாவும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்து மகிழ்விக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,  ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச  செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வாரம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இறுதியான மாபெரும் பிரியாவிடை வைபவம் நடைபெறுகிறது.