பேராசிரியர் யோகராசா மாஸ்டரின் பிரிவு!





 #Varatharajan

சுவடிக்காப்பகம்   ஒன்றை இழந்த துயர்!!

--------------------------------------------------------------------------


யோகராசா மாஸ்டர் என்றும் சேர் என்றும் என்னால் அன்பாக அழைக்கப்பட்ட பேராசிரியர் யோகராசா அவர்களின் மறைவு எனது வாழ்வில் ஓர் அதிர்ச்சியூட்டிய பிரிவாகவே அமைந்துள்ளது.


நான் ஊரில் ஈழநாடு நிருபராகவிருந்த காலத்தில் " கருணை யோகன்" என்ற‌  ஆக்கங்களையும் அவரது சனசமூக நிலையச் செய்திகளையும் கொண்டுவந்து தரும் யோகராசா மாஸ்டர் பின்னர்  விரிவுரையாளர் யோகராசாவாகவும் பேராசிரியர் யோகராசாவாகவும் வந்தபோதும் எப்போதும் அவர் எனக்கு சேர்! தான்.


கடந்த மாதம்  மாஸ்டரைத் தொடர்பு கொண்டபோது அவரது துணைவியார் திலகம் அக்காதான் மறுமுனையில் வந்தார். மாஸ்டர் மகரகமயில் உள்ளதாகச் சொன்னார். சோதனைக்காக அங்கு தங்கி நிற்பதாகச் சொன்னார்.


பின்னர்  அழைத்துக் கேட்டபோது -அப்படியொன்றுமில்லை; மாஸ்டர் கதைக்கிறார் வழக்கம்போல பகிடிக்குக் குறைச்சல் இல்லை' என்றதுடன் தான் தமது உடல்நிலை காரணமாக மட்டக்களப்புக்கு வந்துவிட்டதாகவும் மாஸ்டருக்கு ஒருவர் துணைநிற்பதாகவும்,அவரது மாணவர் ஒருவர் தினமும் போய்ப் பார்ப்பதாகவும் சொன்னார்.


கடந்தவாரம் கடைசியாக அவரது துணைவியாருடன் பேசியபோது விரைவில் இங்கு ( மட்டக்களப்புக்கு) வருவார் என்றும் இப்போதும் பகிடியாகக் கதைக்கிறார் என்றும் சொன்னபோது "சேர்  வந்ததும் கதைக்கிறேன். கேட்டதாகச் சொல்லுங்கள்" என்று சொன்ன‌ எனக்கு சற்று முன்னர்  முகநூலைத் திறந்தவுடன் நண்பர் ராகவனின்  Eliyathamby Ragavan செய்தியை  அறிந்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.


உடனடியாக அவர் துணைவியார் திலகமக்காவுக்கு எடுத்தேன்.

மறுமுனையில் துணைவியாரின் சகோதரி பேசினார்.

இன்று மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரவிருந்ததாக அறிவித்ததுடன் சேரும் தன்னுடன் பேசியதாகச் சொன்னார்.நடந்தவற்றைச் சொன்னார்..


சேருடன் கதைப்பதற்கு ஆவலாயிருந்தேன்- என்றேன்


மறுமுனையில் அழுகை!


சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர்களே சேர்! - அழுதேன்.


சேர்!


உங்களுடைய நகைச்சுவை ததும்பும் ஆழமான கருத்துகளும் விமர்சனங்களும் உங்களை நினைக்கும் அனைவருக்கும் இன்று வந்தபடியிருக்கும். பலரின் மனங்களில் உலா வருவீர்கள் சேர்!


என்னை வெளிவாரியாக  தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கொண்டு ஏனைய ஏதேனும் பாடங்களுடன் பட்டநெறி ஒன்றைக் கற்று தமிழ் மொழியிலும் இலக்கணத்திலும் பட்டம் பெறவேண்டும் என்று ஊக்கியவர் யோகராசா சேர் அவர்களே!


எனது தொலைக்காட்சி நிலையத் தொழிற் பழு காரணமாக- கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் மாதாந்த வகுப்புகளுக்கு போகத் தவறிய போது 

அவர் நைசாகச் சொல்லிக் கடிந்த விதம் என்றும் என் மனதில் அடிக்கடி வருவதுண்டு.


ஊடகத்துறையில் உள்ளவர்கள் தமக்கு எல்லா விடயங்களிலும் அறிவு உள்ளது இனி என்ன கற்க‌விருக்கிறது என்று எண்ணுவதுண்டு.அதனால் மேற்கொண்டு எதையும் படிக்க விரும்புவதில்லை. பட்டமேதும் படித்து இடையில் விடுவதுண்டு.

பல்லைக் கடித்துக் கொண்டு படித்து முடித்துவிட்டீர்கள் என்றால் ஒரு பட்டமும் கிடைத்ததுடன், தமிழ் மொழியில் உள்ள விடயம் பற்றி நீங்கள் சொல்வதற்கும் பேசுவதற்கும் ஓர் அங்கீகாரம் கிடைத்ததாகவிருக்கும் என்றார். உங்கள் பதவிக்கு நல்லது" என்றார்.


நான் கிழக்குப் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு கொழும்பிலிருந்து போகும்போது பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்களின் தயவில் அங்குள்ள மாணவர் விடுதியில் தங்குவதுண்டு.


நண்பரும் ஊடகவியலாளருமான உதயகுமார் Rasanayagam Uthayakumar  இல்லத்திலும் தங்குவேன்.


யோகராசா மாஸ்டர்  என்னிடம்

" நீங்கள் இங்கு வரும் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள்.என்னுடன் வந்து தங்குங்கள், வந்தால் நானும் பின்னேரத்தில் சில பாடங்களைப் பற்றிக் கதைக்க, விளக்க உங்களுக்குப் பிரயோசனமாயிருக்கும்" என்று சொல்லி தம் வீட்டில் வந்து தங்கிப் போகச் சொன்னார். அங்கு தங்கினேன்.


யோகராசா சேர் உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்துவதற்கு கொழும்புக்கு வருவதுண்டு.


கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஊடக டிப்ளோமா நெறி மாணவர்க்கு ஊடகத்தில் மொழி தொடர்பான வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.


அவற்றுக்காக வரும்போதெல்லாம் கொழும்பில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்களில் பேசவும் பஙகுபற்றவும் தமது நேரசூசியைத் திட்டமிட்டுக் கொள்வார். தமது நேரத்தை விடாமல் இவற்றில் செலவழிப்பதே அவர் வழக்கம். 


பல்கலைக்கழக ஊடக மாணவர்களுக்கு ஊடகங்கள் தமிழ் மொழிப் பிரயோகத்தில் விடும் தவறுகளை இலக்கண விளக்கத்துடன் விளக்கிய ஆசான் அவர் .


அவரிடம் அவரது நகைச்சுவை கலந்த விளக்கத்தைக் கற்ற ஊடக மாணவப் பரம்பரை தமிழ் மொழியைச் சீராகப் பிரயோகிக்கும் என்பது நிச்சயம்.


சக்தி ரிவி தொடங்கிய ஆரம்ப காலப் பகுதியில் அதன் முதலாவது காலைநேர நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான காலைக்கதிர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள‌ அழைத்திருந்தேன்.


தம்மைப் பற்றியல்லாமல் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் பற்றித் தாம் கதைக்க விரும்புவதாகவும் அறிவிப்பாளர்கள் அல்லாமல் என்னையே நேர்காணல் செய்யவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும்  கேட்டார். "சிவத்தம்பி சேர் பற்றி நீங்களும் அறிந்திருப்பதால் ஒரு கலந்துரையாடல் போல செய்யலாம்" என்றார்.

அவரின் விருப்பப்படி அந்த நேர்காணலை நானே செய்தேன்.


யோகராசா மாஸ்டர் சிவத்தம்பி சேர் எழுதிய பல நூல்களைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்தார்.


நேரடி நிகழ்ச்சியில் அவர் கதைக்கும் போதே அவ்வளவு நூல்களையும் காட்டினோம்.


சக்தி ரிவியின் தொடக்ககாலம்.‌கலையகத்தில் இரண்டு கமராக்களே இயங்கிய காலம் அது.


சிவத்தம்பி சேர் பிற்காலத்திலும் விதந்து பாராட்டிய நிகழ்ச்சியாக -அவரைப் பற்றிய ஓர் ஆவணமாக- அந்த நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெருமை யோகராசா சேர் அவர்களுக்கே சொந்தமானதாகும். 


சில மாதங்களுக்கு முன் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பு எடுத்தபோது வழமைபோல நீண்ட நேரம் கதைத்தார்.


கடைசியில்,நேரத்தைக் கேட்டு விட்டு "படுங்கள் நித்திரை தான் முக்கியம்" என்றார்.


அண்மையில் அவரது துணைவியாருடன்  கதைத்தபோது "சேர் யார் நேரம் என்று பார்க்காமல் ஒவ்வொருவராகக் கதைப்பார். கதைத்து முடிந்ததா என்று பார்த்தால் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். அல்லது வாசிப்பார்.

வீட்டிலுள்ள எல்லாப் பேப்பர் துண்டுகளிலும் எழுதி  வைத்திருப்பார். கலண்டர் பின்பக்கம், இடைவெளி என்று காணும் கடதாசி எல்லாம் எழுதிவந்தார்.

வீடு திருத்த வருபவர்கள் காணும் கடதாசி பேப்பர்களை எல்லாம் எடுத்து ஒரு புறமாக வைக்கப் பழகிவிட்டார்கள் என்று சொன்னார்.


யோகராசா மாஸ்டர் போலவே நகைச்சுவையாகப் பேசும் அவர்-" மாஸ்டர் பஸ்ஸில் போகும்போது பஸ் கண்டக்டர் டிக்கெற் தருமட்டும் அவனைப் பார்த்தபடியே இருப்பார். நாங்களென்றால் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குவது சோதனையாளர்கள் வந்தாலும் என்ற பயத்தில்.


ஆனால் மாஸ்டர் பார்ப்பது அதற்காக அல்ல.

எழுதுவதற்கு ஒரு சிறு துண்டு கிடைக்கும் என்ற ஆவலே அதற்குக் காரணம்" என்று சிரித்தார்


என்னையும்  அன்றைக்குச் சிரிக்க வைத்தது இந்தச் செய்திக்காகத்தானா சேர்? - என்று இன்று  நினைக்கிறேன்.


அவருடன் உரையாற்றும்போது ஒருமுறை 'பாரதியாரின் குரு அல்வாய்ச் சாமி பற்றிய நிகழ்ச்சி "ஸ்கைப்பில்"உஙகளைப் பார்த்தேன் சேர் நிகழ்ச்சி நன்றாக இருந்தது" என்றேன்


ஸ்கைப்பில் தான் பங்கு பற்றுவதை விரும்புவதில்லை என்றார்‌.


ஏன் சேர்- என்றேன்.


தான் மற்றவர்கள் கதைக்கும்போது அடிக்கடி தூங்கிவிடுவதாகவும்

அதிலுள்ள ஒருவர் அலைபேசியில் வந்து தம்மை எழுப்பிவிடுவதாகவும் சொன்னார். 

"அதால நான் அப்படி இருந்து பேச விரும்புவதில்லை அந்த நேரம் ஏதாவது வாசிக்கலாம்; எழுதலாம் " என்றார் 


கண்டிப்பு, துயரம், விரக்தி எல்லாவற்றையும் நகைச்சுவையாகவே பகிரும் பண்பு நிறைந்தவர் என்பதை அவருடன் பழகிய அனைவரும் அறிவர்.


தொண்ணூறுகளில் மட்டக்களப்பில் விபத்துக்குள்ளாகிப் படுகாயமுற்ற‌ அவரது துணைவியாரை கொழும்பு விபத்து மருத்துவமனையில் பார்க்கப் போனபோது 

மாஸ்டர் மிக்க துயரத்துடன் நின்றிருந்தார்


"என்ன சேர் நடந்தது. நியூசில் பார்த்தோம்" என்றபோது 


நாட்டின் ஜனாதிபதி கூட கூட்டங்களுக்குத் தாமதமாகத் தான் வருகிறா..எங்கட அம்புலன்ஸ் ட்ரைவர் அவசரப்பட்டு முந்தியுள்ளான்" என்றார்.


இத்தனை தேடல்கள் ஆய்வுகள் வைபவங்கள் கட்டுரைகள் என்பவற்றுக்கு மத்தியில்  நாளாந்தம் தமது துணைவியாருக்குத் துணையாகப் பணிசெய்த அவரது வாழ்க்கைப் பயணத்தை அவரை அறிந்தோர் அறிவர்.


சில மாதங்களுக்கு முன் கதைக்கும்போது இரண்டு நாளாக மனது சரியில்லை என்றார்.

"ஏன் சேர்?'-என்றேன்.

"நூல் ஒன்றுக்கு அணிந்துரை கேட்டு வந்துள்ளான் பாவம் 

நல்ல ஆர்வம் உள்ள பையன்" என்று சொன்னவர் நூலைப்பற்றியும் சில வரிகளில் ஒரு பகிடியும் சொல்லி

"முன்பு கரேக்டர் சேட்டிவிக்கற் குடுக்கிற மாதிரி" டைப் பண்ணிக் கொண்டு வாங்கோ நான் கீழ சைன் பண்ணுறன்- என்று லெற்றர் கெற்றைக கொடுக்கவேண்டும் போல இருக்கு" என்றார்.

நான் அவர் வீட்டில் தங்கப்போன வேளையில் ஒருமுறை புலம்பெயர் கவிதைகள் வந்த பல‌ நூல்களை தரையில் பரவி வைத்திருந்தார்

அவை தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்போவதாகச் சொன்னார்.


இன்னொரு முறை போனபோது போராளிகள் எழுதிய ஆக்கங்களையும் நூல்களையும் பரவி வைத்திருந்தார்.

அதுவும் ஓர் ஆய்வுக் கட்டுரைக்காக..!


அண்மையில் கதைக்கும்போது கிழக்கிலங்கையில் மறைந்துள்ள பல ஆக்க இலக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறேன்

‌ 

கனடா தாய்வீட்டில் எழுதவுள்ளேன் என்று மிகவும் மகிழ்ச்சி ததும்பக் கூறினார்.


பல வெளிவராத நூல்கள் இலக்கியங்கள் பற்றி எழுத உள்ளேன் என்பதே கடைசியாகச் சொன்னது. பட்டத்திற்கான ஆய்வுக்குப் பின்னரும் தேடல்களை மும் ஆய்வுகளையும் தொடர்ந்து கொண்டிருந்த அறிஞர் யோகராசா அவர்கள்.


கடைசிவரையும் தேடிக்கொண்டேயிருந்தவர் தமது தேடற் பணியை இடையில் நிறுத்திவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டார் என்பதே  எல்லோரதும் துயரமாகும்


இலக்கியப் பரம்பரைக்கு மட்டுமன்று ஊடகப் பரம்பரைக்கும் யோகராசா மாஸ்டரின் மறைவு பேரிழப்பாகும்.


ஓர் அரிய சுவடிக்காப்பகத்தை இழந்துள்ளோம் என்பதை உணர்ந்து ஏங்குகிறோம் சேர்! 


உங்கள் புன்னகை கலந்த மென் குரலும் ஆர்வத்தைத் தூண்டும்  கதைகளும்  

எங்கள் நினைவுகளில் என்றும் கலந்தவை சேர்!


போய்வாருங்கள் சேர்!!


உங்களில் அன்பும் நட்பும் நன்றியும் உள்ளவர்களே பலர்.‌ அதில் நானும் ஒருவன்.


என்றும் நன்றியுடன்!