ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். அந்த இருக்கையில் இருந்த பயணி பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது" என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.


Post a Comment
Post a Comment