Nafeen Ismail
இன்று 2025 ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் கல்வித் துறையின் தற்போதைய நிலவரம் தொடர்பான அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார்.
நாட்டின் பல பாடசாலைகள் மாணவர் மிக்கையற்றவையாக உள்ளமை, கல்வித் துறையின் இன்றைய நிலையை மீளாய்வு செய்யும் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி தெரிவித்த புள்ளிவிபரங்களின் படி, நாட்டில் 98 பாடசாலைகளில் ஒரு மாணவரும் இல்லை. மேலும், 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவும், 406 பாடசாலைகளில் 20 மாணவர்களுக்கு கீழாகவும், 752 பாடசாலைகளில் 30 மாணவர்களுக்கு குறைவாகவும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இது 100 மாணவர்களுக்கு குறைவான 3144 பாடசாலைகளாகவும், 50 மாணவர்களுக்கு குறைவான 1506 பாடசாலைகளாகவும் காணப்படுகின்றது.
சில பிரதேசங்களில், 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள், 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் போன்ற சீரற்ற அமைப்புகள் காணப்படுகின்றன.
இது மனிதவளங்களின் சிறுமையான பயன்பாடாகவே கருதப்படுகின்றது. இதனையடுத்து, ஜனாதிபதி சில பாடசாலைகளை மூட வேண்டியதையும், சிலவற்றை ஒன்றிணைக்க வேண்டியதையும், மேலும் சில பகுதிகளில் புதிய பாடசாலைகளை உருவாக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். முதன்மையாக, நிதி மற்றும் மனிதவளங்களை சிறப்பாக நிர்வகிக்க இது வழிவகுக்கும்.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்காக தனிப்பட்ட பாடசாலைகள் வைத்திருப்பதை விட, பாடசாலைகளை இணைத்து, நல்ல வசதிகளுடன் கூடிய கல்வி சூழலை உருவாக்க முடியும். இதன் மூலம் கல்வியின் தரம் மேம்படும், மாணவர்கள் சமனான வாய்ப்புகளை பெறுவர்.
இதே நேரத்தில், புது பாடசாலைகளை கட்டுவதன் மூலம் சில பிந்திய பிரதேசங்களுக்கு கல்வித் தரம் மேம்படும். இது கல்வி சமத்துவத்தையும், சமூக வளர்ச்சியையும் தூண்டும். அரச செலவுகள் குறைவடையும், வேலைவாய்ப்பு திறன் மேம்படும், பொருளாதார அபிவிருத்தி ஊக்கமடையும் என்பவை இதன் கூடுதல் நன்மைகளாகும்.
ஆயினும், இதனுடன் தொடர்புடைய சவால்களும் ஏராளம். பாடசாலைகளை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தலாம். மாணவர்களுக்கு அதிக தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆசிரியர்கள் இடமாற்றம் போன்ற பதற்றங்களுக்கு முகமளிக்க நேரிடலாம். இதனை ஈடுசெய்ய அரசாங்கம் இலவச விசேட போக்குவரத்து திட்டங்கள், வரப்பிரசாதங்களை அறிமுகம் செய்யலாம்.
எனவே, இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றிலும் திட்டமிட்டும், மக்களுடன் ஆலோசித்து முன்னெடுக்கப்பட வேண்டும். மாற்றங்களைப் புரிந்துகொள்ளும் பொதுமக்கள் ஒத்துழைப்பும், அரசின் நுட்பமான செயல்திறனும் அவசியமாகின்றன.
இத்தகைய மாற்றங்கள், கல்வியைப் புதுப்பிக்கும் மட்டுமல்ல நாடு முழுவதும் சமத்துவமான, தரமான மற்றும் பயனுள்ள கல்வியை வழங்கும் ஒரு புதிய யுக்தியின் தொடக்கமாகும்.
இதுவே இலங்கையின் உண்மையான அபிவிருத்திப் பாதைக்கு வழி வகுக்கும்.
Nafeen Ismail


Post a Comment
Post a Comment