சுன்னாகம் குடிநீர் பிரச்சினை.ஐங்கரநேசனுக்கு மீண்டும் அழைப்பாணை




சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் ஆஜராகுமாறு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பிலான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மல்லாகம் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது வடமாகாணத்திற்கு பொறுப்பான பிரதான அனர்த்த முகாமைத்துவ செயலாளர் உள்ளிட்ட அனைத்து முகாமைத்துவ அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
எவ்வாறாயினும், கடந்த வழக்கு விசாரணையின்போது அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய வடமாகாண விவசாய அமைச்சரை அடுத்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீர் விநியோகம் தொடர்பில் மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
அதிகாரம் இல்லாத குடிநீர் விடயம் தொடர்பில் வடமாகாண சபை ஏன் அறிக்கை வெளியிட்டது என இதன்போது நீதவான் வினவியுள்ளார்.
இதேவேளை, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை தொடர்ந்தும் குடிநீரை விநியோகிப்பதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு உடுவில் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச வைத்திய அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.