(க.கிஷாந்தன்)
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இம்மக்களுக்கு இதுவரை ஏதுவும் செய்யவில்லை என்று சொல்ல முன்வருவார்களே ஆனால் அவர்களோடு விவாதத்தில் ஈடுப்பட நான் தயார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 18.09.2017 அன்று பண்டாரவளை கரந்தகொல பிரதேசத்தில் உமாஓயா அபிவிருத்தி காரியாலயத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரரா, மகாவலி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், ஆளுநர், அரச அதிகாரிகள், உமாஓயா திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உமாஓயா வேலைத்திட்டத்தினை கடந்த கால அரசாங்கம் முன்னெடுத்தது என ஒதுக்கி விடவில்லை. ஆக தற்போதைய அரசாங்கம் இத்திட்டத்திற்கு பொறுப்பு கூறும் நிலையில் உள்ளதால் இதற்கென விசேட அமைச்சரவை அங்கீகாரம் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
இதற்கமைவாக இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவு தொகைகள், உபகரணங்கள் நட்ட ஈடுகள் என தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இலவசமாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நட்டஈடு வழங்கி வருவதுடன் சாதாரணமாக பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு கண்டு வரும் அதே பட்சத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை திருத்துவதற்கு பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வீதிகளை புனரமைப்பதற்காக இதுவரை 163 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
இது இவ்வாறிருக்க தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கும் இப்பகுதி மக்களுக்கு எட்டாயிரம் நீர் தாங்கிகள் வழங்கப்படவுள்ளது. அத்தோடு பவுஸர் ஊடாக தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் விசேட தண்ணீர் திட்டம் ஆரம்பிக்க இருபதாயிரம் மில்லியனுக்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரெல்லாம் இப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வரும் நிலையில் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இம்மக்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதும் செய்யவில்லை என தேவையற்ற வார்த்தை பிரயோகம் செய்து வருகின்றனர்.
இது இவர்களுடைய வழக்கம். நாடு அரசு என்ற ரீதியில் எங்காவது வெளியிட உதவிகளை பெற்று சரி மக்களை காப்பாற்றும். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிலையும் உருவாகியுள்ளது.
தற்போது நீங்கள் கண்ணுற்று பார்ப்பீர்கள் என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளை மறுத்து ஒன்றும் செய்யவில்லை என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறினால் அவர்களோடு நேரடி விவாதத்திற்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
குறைபாடுகள் இருக்க தான் செய்யும். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வது அழகல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment