புகையிரத வீதிகளில் செல்பி எடுத்த 24 பேர் உயிரிழப்பு



இந்த ஆண்டின் கடந்த 09 மாத காலப்பகுதியில் புகையிரதம் மற்றும் புகையிரத பாதைகளில் செல்பி எடுக்க முயற்சித்து 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 

புகையிரதங்களினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், 2016ம் ஆண்டில், புகையிரத வீதிகளின் ஊடாக பயணிப்பதன் காரணமாக புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட 436 விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன், 256 பேர் காயமடைந்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது. 

அதேவேளை புகையிரத குறுக்கு வீதிகளில் புகையிரதங்களுடன் வாகனங்கள் மோதி 84 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன் கடந்த ஆண்டில் புகையிரதத்தில் பயணிக்கும் போது புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்து 76 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுபோன்ற புகையிரத விபத்துக்களை குறைப்பதற்காக புகையிரத வீதிகளுக்கு அருகில் வசிக்கின்ற மக்களை தௌிவூட்டுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.