முஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு


இலங்கையில் தீவிரவாத அமைப்புக்களின் குண்டுத் தாக்குதலினால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்விற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதுடன், முஸ்லீம் மக்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் திட்டமிட்ட குண்டுத் தாக்குதல் என்பது மிகத் தெளிவானது. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய தரப்பினரால் இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாக அறியமுடிகின்றது. 

அறிவிக்கப்பட்ட இந்த தகவலை, பாதுகாப்பு அமைச்சும் மற்றும் பொலிஸ் திணைக்களம், படையினர் தரப்பு உட்பட அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதியும் தவிர்ப்பதற்கு தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் உயிரிழந்துள்ளார்கள். வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டவர்கள் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களின் உறவினர்கள் எம்மிடம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் குண்டுத் தாக்குதலில் ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன் எப்போதும் இல்லாதவாறு ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு உலகலாளவிய ரீதியில் செயற்படும் அமைப்பு இலங்கையிலும் தனது தீவரவாதத்தை தொடங்கியுள்ளது. 

நியூசிலாந்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும், இலங்கை சம்பவத்திற்கும் முடிச்சுப் போடுவது என்ன என்பது பற்றி எமக்குத் தெரியவில்லை. 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு கோரி நடைபெற்ற யுத்தத்தில் எத்தனையோ லட்சம் மக்கள் உயிரிழந்து, அந்த நிலைமைகள் ஓய்ந்துள்ள போது, இந்த சம்பவத்தினால் நாடு முழுவதும் அச்ச நிலை தோன்றியுள்ளது. இந்த சம்பவத்தினால், தமிழ் மக்கள் மேலும் அச்சமடையும் நிலைமை காணக்கூடியதாக உள்ளது. 

அவசரகால நிலை ஒன்றினை உருவாக்கி, இராணுவத்தினர் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளை நடாத்துகின்ற போது, முன்பு போன்று தமிழ் மக்கள் பாதிக்காதவகையில் தமது சோதனைகளை நடாத்த வேண்டியது அவசியம். ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு முஸ்லீம் அடிப்படைவாதிகளாக இருக்கின்ற நேரத்தில் இந்த நாட்டில் இருக்கும் முஸ்லீம்களும் பாதிக்கப்படுகின்றார்கள். 

இந்துக் கோவில்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மாறி மாறி தாக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் இந்த நாட்டில் அதிகரித்திருந்ததையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் தீவிரவாத நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களும் தப்பிக்கொள்ளாதவகையில் நெருக்கடிகளுக்குள் ஆளாகக்கூடும். 

இதனால், சர்வதேச நாடுகளின் தலையீடுகள் இலங்கையில் அதிகரிக்கவுள்ளன. 2001 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தான் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை தடை செய்வதற்கான பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், அமெரிக்கா இலங்கைக்கு உதவுவதாக கூறியிருப்பதும், அதனால், தீவிரவாதிகள் இலங்கையில் அதிகமான நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புக்கள் உள்ளன. இது எமது கடந்தகால நடவடிக்கைகளில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றதென்பதும், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது. 

இந்த நிலமைகளை கருத்திற்கொண்டு, எமது அரசியல் நடவடிக்கைகளையும், இனப்பிரச்சினைக்கான நடவடிக்கைகளிலும், மிகவும் புத்திசாலி தனமாகவும், தந்திரோபாயமாகவும், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(யாழ். நிருபர் சுமித்தி)