‘கல்முனை வடக்கு’ எனத் தமிழருக்கு வேண்டாம்!“


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம் எனக் கோரி கல்முனை முஸ்லிம் சமூகத்தினர் இன்று காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்றுகூடியுள்ள அவர்கள், “தரமுயர்த்தல் என்ற போர்வையில் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடைசெய்ய வேண்டும். கல்முனையைத் துண்டாக்க இடமளியோம். கல்முனை வடக்கு எனத் தனிப் பிரதேச செயலகம் தமிழருக்கு வேண்டாம். முஸ்லிம்களும் தமிழர்களும் கல்முனைக்குள் ஒன்றாக வாழ்வதையே நாம் விரும்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சத்தியாக்கிரகப் போராடடத்தில் கல்முனை மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள், கல்முனை முஸ்லிம் வர்த்தகர்கள், உலமாக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலயப் பிரதம குருவுமான சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோரினால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.