யுவராஜ் சிங் ஓய்வுற்றார்




``அது ஓர் அழகான கதை. ஆனால் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது... போராடுவது, வீழ்வது அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்குக் கற்றுத்தந்துள்ளது''. ஓய்வு முடிவை அறிவித்த யுவராஜ் உதிர்த்த வார்த்தைகள் இவை. போராடுவதே ஒரு போர் வீரனுக்கான அழகு. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல புற்றுநோய்க்கு எதிராகவும் கடுமையாகப் போராடி, அதிலிருந்து மீண்டார் யுவி. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து மிரட்டினார் யுவி. இந்திய கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராகவும், அதிரடி ஆட்டக்காரராகவும் அழுத்தமான முத்திரையைப் பதித்தார்.  
2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் யுவராஜ் அற்புதமாகச் செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். அந்தத் தொடரில் 362 ரன்கள் அடித்தார் அத்துடன் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த சமயம், புற்றுநோய் இடியாய் வந்து இறங்கியது. யுவராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். முதலில் இது வதந்தியாக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. இது வதந்தியாகவே இருந்திருக்கலாம்; ஆனால், உண்மை அது இல்லையே. யுவராஜூக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 
உலகக்கோப்பை கிரிக்கெட்
அவரது கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிந்தது என்று கூறப்பட்டது. யுவராஜ் குணமடைந்தாலே போதும் என ரசிகர்கள் எண்ணினர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். புற்றுநோயிலிருந்து குணமடைந்து மீண்டு வந்தார். இந்தப் போராட்டம் இத்துடன் முடியவில்லை மீண்டும் கிரிக்கெட் ஆடுவேன் என வைராக்கியமாக இருந்தார். 2013-ல் நீல நிற ஜெர்சியுடன் மீண்டும் கிரிக்கெட் களம் புகுந்தார்.  
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் என் வாழ்நாளில் இருண்ட நாள்கள் என்றார். இதுகுறித்து ஒரு முறை மனம் திறந்த யுவராஜ், ``ஒரு விளையாட்டு வீரனாக இதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தது. தினமும் 6- 8 மணி நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் நம்ப முடியுமா. நான் இதிலிருந்து தப்பித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவே விரும்பினேன். ஆனால் மருத்துவர்கள் என்னை எச்சரித்தனர். நீங்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் பிழைப்பதே கடினம். எனக்கு வேறு வழி தெரியவில்லை. சிகிச்சைக்காகச் சென்றேன்”என்றார்.
யுவராஜ் சிங்
புற்றுநோயின் தாக்கத்தால் பழைய யுவராஜை பார்க்க முடியவில்லை. அவருக்கு அதற்காக எவ்வளவோ போராடினார். பழைய துடிப்பான ஆக்ரோஷமான யுவராஜை அவரால் மீட்க முடியவில்லை. தனது வழக்கமான ஷாட்டுகளை அடிப்பதற்குக் கூட தடுமாறினார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக 2017-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் களமிறங்கினார். அந்தப்போட்டியில் 55 பந்துகளில் யுவராஜ் 39 ரன்களை எடுத்தார். இந்தக் காலகட்டத்தில் மோசமான ஃபார்ம் காரணமாக ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிக்குக் கைமாறினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதிலும் அவருக்கு 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. 
கிரிக்கெட் மைதானத்தில் யுவி
கடந்தாண்டு ஒரு பேட்டியில் இன்னும் எத்தனை நாள்களுக்கு கிரிக்கெட் விளையாடுவேன் எனத் தெரியாது வயதாகி விட்டது. அடுத்தாண்டு ஓய்வு பெற்று விடுவேன் என்றார்.  உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை இதன்மூலம் வெளிப்படையாகக் கூறினார். ஆனால்  இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் யுவி தான் சொன்னபடி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகள், 58 டி-20 போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.