கிரேஸி மோகன் மரணமடைந்தார்


இன்றைய காலை பொழுது, நாடக கலையின் ரசிகர்களுக்கு நன்றாக விடியவில்லை. க்ரீஷ் கர்னாட் மறைந்தார் என்கிற துயரமான செய்தியில் உறைந்திருந்த நாடக ரசிகர்களை, கிரேஸி மோகன் மரணமடைந்தார் என்று காலம் மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
பிரபல நாடக கலைஞராகவும், எழுத்தாளராகவும், தமிழ்த் திரையுலகில் கதை வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வந்த கிரேஸி மோகன் இன்று காலை 11.30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2.00 மணியளவில் காலமானார்.
பல மேடை நாடகங்களை இயக்கி, நடித்துள்ள கிரேஸி மோகன், அடிப்படையில் மெக்கானிக்கல் பொறியாளர். இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். நடிகர் கமல் ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன் , பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, 'கிரேட் பாங்க் ராபர்ரி' என்று கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்காக அவர் எழுதி, நடித்த முதல் கதைக்கு சிறந்த நடிகர், சிறந்த கதையாசிரியர் என்று இரண்டு விருதுகளை கமல் ஹாசன் கையால் பெற்றார். கமலுடன் அன்று ஆரம்பித்த நட்பு இன்று வரையில் தொடர்ந்தது.
பெரும்பாலும் பிறரை எரிச்சலூட்டும் நகைச்சுவை கிரேஸி மோகனிடம் இருந்ததில்லை. உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றியவர்களைப் பற்றிய நகைச்சுவைகளை ஒரு கட்டத்துக்குப் பிறகு நிறுத்திக்கொண்டு, அத்தகைய ஆரம்ப கால எழுத்துகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டவர்.
முதன் முதலில் எஸ்.வி. சேகருக்காக, 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்று கிரேஸி மோகன் எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை, எஸ்.வி.சேகர் மேடையேற்றினார். அந்த நாடகத்தின் வெற்றி, அதுவரையில் மோகன் ரங்காச்சாரியாக இருந்தவரை 'கிரேஸி மோகனாக' மாற்றியது. அன்றிலிருந்து ரசிகர்கள் அன்போடு கிரேஸி மோகன் என்று அழைத்து வந்தனர்.
இயல்பான வசனங்களால் நகைச்சுவை உணர்வைத் தூண்டி, ரசிகர்களைக் கட்டியிழுக்கும் கலை கிரேஸி மோகனுக்கு கைவந்திருந்தது. நடிப்பைப் பொருத்தவரையிலும் கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை.
ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று முன்பொருமுறை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் கிரேஸி மோகன்.எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். கிரேஸி மோகனின் விருப்பமான எழுத்தாளர் பி.ஜி.வோடெளஸ். அவருடைய பாதிப்பு மோகனிடம் நிறைய உண்டு. ரட்சகன் திரைப்படத்தில் கிரேஸி மோகன் எழுதியிருந்த வசனத்தில், கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.
நடிப்பையும், வசனங்களையும் விட கிரேஸி மோகனுக்கு பன்முகத் திறமைகள் உண்டு. நன்றாக ஓவியம் வரைவதில் கிரேஸி மோகன் கெட்டிக்காரர். மரபுக் கவிதைகளை எழுதுவதில் வல்லவர். நல்ல இசை ஞானமும், சங்கீதமும் அவருக்கு அத்துப்படி. தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றிருக்கிறார்.
எப்பொழுதும் ரசிகர்களை ரசித்து சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் முதல் முறையாக அழவைக்கிறார்.
"நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது."
"கிரேசி" என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் "நகைச்சுவை ஞானி" என்று கமல் ஹாசன் கிரேஸி மோகன் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.